இந்தியாவின் டாப் 5 ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தை விடவும் லாபத்தில் கூடுதலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
விப்ரோ நிறுவனம் இன்று காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ள காரணத்தால் இன்று மும்பை பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருந்தது. இதன் வாயிலாக வர்த்தக முடிவில் 2.96 சதவீதம் வளர்ச்சி அடைந்தது.
விப்ரோ நிறுவனம்
விப்ரோ நிறுவனம் புதிய சிஇஓ தலைமையில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் மூலம் ஜூன் காலாண்டில் இந்நிறுவனத்தின் லாப அளவு கடந்த காலாண்டை வடிவும் 9 சதவீதம் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
லாபத்தில் வளர்ச்சி
சந்தை கணிப்புகளை உடைத்துச் சிறப்பான லாப வளர்ச்சியை அடைந்துள்ள விப்ரோ நிறுவனம் ஜூன் காலாண்டில் 3,246 கோடி ரூபாய் லாபத்தை அடைந்துள்ளது. இன்போசிஸ் இக்காலாண்டில் வெறும் 2.3 சதவீத லாப வளர்ச்சி மட்டுமே அடைந்துள்ளது.
விப்ரோ வருவாய்
மேலும் விப்ரோ நிறுவனம் ஜூன் காலாண்டில் 12.4 சதவீத வளர்ச்சியில் 18,252 கோடி ரூபாய் அளவிலான வருவாயைப் பெற்று முதலீட்டாளர்கள் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளது. அளவில் இன்போசிஸ் நிறுவனத்தை விடவும் குறைவாக இருந்தாலும், வளர்ச்சி அளவீட்டில் மிகப்பெரிய உயர்வாகும்.
செப்டம்பர் காலாண்டு
மேலும் விப்ரோ நிறுவனத்தின் ஐடி சேவை மூலம் கிடைக்கும் வருவாய் செப்டம்பர் காலாண்டில் 2.53 பில்லியன் டாலரில் இருந்து 2.58 பில்லியன் டாலர் வரையில் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இது 5 முதல் 7 சதவீத வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.
விப்ரோ வர்த்தகம்
விப்ரோ ஜூன் காலாண்டில் சுமார் 715 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைக் கைப்பற்றியுள்ளது, 100 மில்லியன் டாலர், 50 மில்லியன் டாலர், 20 மில்லியன் டாலர் பிரிவில் தலா வாடிக்கையாளர்களைப் பிடித்துள்ளது விப்ரோ.
ஊழியர்கள் வெளியேற்பு விகிதம்
மேலும் விப்ரோ நிறுவனத்தில் தற்போது ஊழியர்கள் வெளியேற்பு விகிதம் 12.1 சதவீதத்தில் இருந்து 15.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நிறுவனத்தின் வர்த்தகத்தைக் கட்டாயம் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications