இந்தியாவின் 4 வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ இன்று செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில் ஐடி பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் விப்ரோ முடிவுகளுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. விப்ரோ ஏற்கனவே ஊழியர்களுக்குப் பல்வேறு அதிர்ச்சி கொடுத்த நிலையில், தற்போது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
விப்ரோ Q2
செப்டம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் வருவாய் 14.6 சதவீதம் உயர்ந்து 22,540 கோடி ரூபாயை பெற்றுள்ளது, ஆனால் லாபத்தில் சரிவை சந்தித்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபத்தின் அளவு 9.3 சதவீதம் சரிந்து 2600 கோடி ரூபாயை பெற்று உள்ளது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 2820 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்ரேட்டிங் மார்ஜின்
விப்ரோ நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் செப்டம்பர் காலாண்டில் சுமார் 1.6 சதவீதம் அதிகரித்து 15.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல் நிலையான நாணய மதிப்பீட்டில் விப்ரோ-வின் வருவாய் காலாண்டு அடிப்படையில் 4.1 சதவீதமும், வருடாந்திர அடிப்படையில் 12.9 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
பெரிய திட்டங்கள்
2023 ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் பெரிய திட்டங்களின் எண்ணிக்கை 42 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது, இதேபோல் மொத்த ஆர்டர் புக் செப்டம்பர் காலாண்டில் 24 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என விப்ரோ தெரிவித்துள்ளது.
வெளியேற்ற விகிதம்
மேலும் விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 23 சதவீதமாக உயர்ந்துள்ளது. இக்காலகட்டத்தில் சுமார் 10000 ஊழியர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதோடு அட்டிரிஷன் விகிதம் 3 காலாண்டுகளாகக் கணிசமான அளவில் குறைந்து வருகிறது.
டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் தற்போது 21.5 சதவீதமாக உள்ளது. இதேபோல் செப்டம்பர் காலாண்டில் வரிக்கு பிந்தைய லாப அளவீட்டில் முதல் முறையாக 10000 கோடி ரூபாய் என்ற அளவீட்டைத் தாண்டியுள்ளது டிசிஎஸ்.


Click it and Unblock the Notifications