கல்லூரியில் இருந்து வெளியே வரும்போதே எப்பாடுபட்டாவது முன்னணி ஐடி நிறுவனங்களில் சேர்ந்து விட வேண்டும் என்பதுதான் பல மாணவர்களின் கனவு. ஆனால் இதற்கு அப்படியே தலைகீழாக கேம்பஸில் தேர்ந்தெடுக்கப்பட்டும் நிறுவனத்திற்கு அழைக்காமல் இருப்பது, ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்ப வளர்ச்சியால் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது என பல பிரச்சினைகள் ஐடி நிறுவனங்களில் இருந்து வருகிறது.
அப்படி இருக்கையில் 2025-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 614 புதிய ஊழியர்களை விப்ரோ நிறுவனம் நியமித்துள்ளது. இந்தியாவின் நான்காவது முன்னணி IT தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கும் விப்ரோ, கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகமான ஊழியர்களை ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் சேர்த்துள்ளது.

கடந்த காலாண்டில் விப்ரோ நிறுவனத்தை விட்டு 1157 ஊழியர்கள் சென்றனர். இதன் காரணமாக அப்போது பணியாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் 234,054-ஆக இருந்த மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் 233,346-ஆக உள்ளது. இந்த காலாண்டில் 614 புதிய ஊழியர்களை சேர்த்திருந்தாலும் கடந்த காலாண்டில் குறைந்த ஊழியர்களின் எண்ணிக்கையை முழுமையாக ஈடு செய்ய முடியவில்லை.
டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனமும் தங்கள் நிறுவனத்தில் ஏற்பட்ட ஊழியர் எண்ணிக்கை சரிவை நான்காவது காலாண்டில் மாற்றியமைத்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் 625 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாத இறுதியில் 6,433 ஊழியர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கை 607,979-ஆக அதிகரித்துள்ளது.
வருவாய் வளர்ச்சி மந்தநிலையாக இருந்த போதிலும் ஊழியர்களின் சேர்க்கை தொடர்ந்து நடைபெறுகிறது. மறுபுறம் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக ஏற்பட்ட இடையூறுகளால் IT துறையில் பணியாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
2024-ஆம் நிதியாண்டில் 14.2% பேர் மட்டுமே நிறுவனங்களில் இருந்து வெளியேறினர். ஆனால் தற்போதைய நிலவரப்படி இந்த விகிதம் 15 சதவீதமாக இருக்கிறது. தொடர்ந்து தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு நிறுவனங்கள் பணியமர்த்தும் செயல்முறையை கையில் எடுத்தாலும்.. அதற்கு இணையாக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தான் செய்கிறது.
சமீபத்தில் விப்ரோ நிறுவனம் தனது நான்காவது காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2025-ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ரூ.3,570 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது சுமார் 6.4 சதவீத வளர்ச்சியை குறிக்கிறது. வருவாய் வளர்ச்சியின் காரணமாக இனிவரும் நாட்களில் பணியமர்த்தும் செயல்முறை சற்று அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications