இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜத்தின் தலால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு புதிய பணியை நிறுவனத்திற்கு வெளியில் தேட திட்டமிட்டு உள்ளதாக அறிவித்த நாளில் இருந்து விப்ரோ பங்குகள் தொடர்ந்து 5வது நாளாக சரிவடைந்து வருகிறது.
விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ-வாக தியரி டெலாபோர்ட்டே தலைமையேற்றி 4 வருடமான நிலையிலும் இந்நிறுவனத்தின் வர்த்தகம், நிர்வாகம் இன்னும் முழுமையாக வளர்ச்சி பாதைக்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் சிஇஓ-வாக இருக்கும் ஒரே வெளிநாட்டவர்.

இந்த நிலையில் விப்ரோ திங்கள்கிழமை பங்குச்சந்தைக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனங்கள் அதன் பங்கு மதிப்பு, சொத்து மதிப்பு, முக்கிய நிர்வாக மாற்றங்கள் குறித்து அவ்வப்போது அறிக்கையை சமர்ப்பிக்கும். ஆனால் இந்த அறிக்கை தமிழ்நாட்டை தொடர்புடையது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இந்நிறுவனத்திற்கு சொந்தமான முக்கிய சொத்துக்களை விற்பனை செய்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை நடந்த இந்த ரியல் எஸ்டேட் பரிவர்த்தனையில் சுமார் 14.02 ஏக்கர் நிலம் மற்றும் சுமார் 589,778 சதுர அடி பரப்பளவை கொண்ட 20 ஆண்டு பழமையான அலுவலக கட்டிடத்தை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளது.
விப்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் அலுவலகத்தை சென்னையின் பிரபலமான காசாகிராண்ட் பிஸ்பார்க் பிரைவேட் லிமிடெட் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. 14.02 ஏக்கர் நிலம் மற்றும் 589,778 சதுர அடி கொண்ட அலுவலக கட்டிடம் ஆகியவற்றை 266.38 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு உள்ளது.

விப்ரோ நிறுவனத்தின் இந்த அலுவலகம் மற்றும் நிலம் சென்னையின் முக்கிய பகுதியான சோழிங்கநல்லூர், விப்ரோ தெரு, எண். 475-A இல் அமைந்துள்ளது. விப்ரோ ஜூன் காலாண்டில் மொத்த லாபத்தில் 12 சதவீத உயர்வை பதிவு செய்தாலும், EBIT அளவில் 3 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
இப்படியிருக்கையில் விப்ரோ செலவுகளை குறைக்க பல முக்கிய முயற்சிகளை எடுத்த நிலையில் தற்போது சென்னை அலுவலகத்தையும், நிலத்தையும் விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனையால் விப்ரோ சென்னையில் வைத்திருக்கும் வர்த்தகம், ஊழியர்களுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை.


Click it and Unblock the Notifications