இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ புதிய சிஇஓ ஸ்ரீனிவாஸ் பலியா தலைமையில் புது புது மாற்றங்கள் உடன் வேகமாக வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. விப்ரோ கடந்த சில வருடங்களாக எதிர்கொண்டு வந்த பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று மூத்த அதிகாரிகள் தொடர்ந்து வெளியேறுவது.
இது தொடர்பாக விப்ரோ நிர்வாகம் மூத்த அதிகாரியாக இருந்த ஜதின் தலால் விதிமுறை மீறி சக போட்டி நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனத்தில் சேர்ந்தது தொடர்பாக வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கு விப்ரோ - ஜதின் தலால் - காக்னிசென்ட் ஆகியவற்றுக்கு மத்தியில் நடந்து வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

விப்ரோ நிறுவனத்தில் சுமார் 21 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பணியாற்றிய ஜதின் தலால் தனது தலைமை நிதி அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்கச் சாப்ட்வேர் சேவை நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்-ல் புதிய தலைமை நிதி அதிகாரியாகச் சேர்ந்தார்.
ஜதின் தலால் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் விப்ரோ பதவியை ராஜினாமா செய்த நிலையில், டிசம்பர் மாதம் CTS நிறுவன பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் விப்ரோ நிர்வாகம் ஜதின் தலால் மீது பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
இதை தொடர்ந்து ஜதின் தலால் இந்த வழக்கை நடுவர் மன்றத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். இந்த வழக்கின் விசாரணையில் தற்போது 3 தரப்பினரும் ஒப்புதல் அளித்தது மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து வெளியான தகவல் படி காக்னிசன்ட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, ஜதின் தலாலின் வழக்கைத் தீர்க்கவும் மற்றும் அவர் முன்பு பணியாற்றிய விப்ரோ தொடுத்த வழக்கைத் தீர்க்கவும் CFO ஜதின் தலாலுக்கு CTS நிறுவனம் 505,087 டாலர் செலுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 4.21 கோடி ரூபாயாகும்.
இது தொடர்பாக அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEC-க்கு காக்னிசென்ட் சமர்பித்த அறிக்கையில், "எந்த தரப்பினரும் தவறை பொறுப்பை ஏற்காமல் இந்த வழக்கிற்கு தீர்வு காணப்பட்டது. காக்னிசென்ட் நிறுவனம் செலுத்திய கட்டணமானது ஜதின் தலால் விப்ரோவுக்குச் செலுத்திய செட்டில்மென்ட் பேமெண்ட் மற்றும் அவரது வழக்கு செலவுகளைத் திருப்பிச் செலுத்துவதும் பொருட்டு அளிக்கப்பட்டு உள்ளது." என தெரிவித்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தில் சுமார் 21 வருடம் பணியாற்றியது மட்டும் அல்லாமல் CFO என்ற உயர்பதவியிலும் பணியாற்றிய ஜதின் தலால் மீது விப்ரோ நிர்வாகம் வழக்குத் தொடுத்துள்ளது அப்போதைய காலகட்டத்தில் பெரும் அதிர்ச்சி அளித்தது. ஆனால் அதன் பின்பு பல அதிகாரிகள் விப்ரோ-வில் வெளியேறினர், சிஇஓ-வாக இருந்த தியரி டெலாபோர்ட்டே-வும் வெளியேறினார்.


Click it and Unblock the Notifications