கர்நாடகா: ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன் தயாரித்து வழங்கக்கூடிய விஸ்திரான் நிறுவனம் கர்நாடகாவில் புதிதாக ஆலை அமைக்க இருக்கிறது. இதற்காக 20 மில்லியன் டாலர்களை இந்த நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்திரான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐபோன்களை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன்களை தயாரித்து வழங்கக்கூடிய விஸ்திரான் நிறுவனம் கர்நாடகாவில் புதிய ஆலையை நிறுவ இருக்கிறது. 20 மில்லியன் டாலர் முதலீட்டில் இந்த ஆலை நிறுவப்பட இருப்பதாக விஸ்திரான் நிறுவனம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்த ஆவணத்தில் தெரிவித்துள்ளது.

அதன்படி விஸ்திரான் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான ஐசிடி சர்வீஸ் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் இன்போகாம் ஆகிய நிறுவனங்கள் வாயிலாக இந்த முதலீடு மேற்கொள்ளப்பட இருக்கிறது. எதிர்காலத்தில் தங்கள் நிறுவனம் சார்பாக இந்தியாவில் லேப்டாப் உற்பத்தி ஆலை நிறுவ இருப்பதாகவும் அதற்கு கர்நாடகாவில் தற்போது புதிதாக கட்டப்படும் ஆலை பெரிய உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
விஸ்திரான் நிறுவனத்தின் லேப்டாப்புகளை விற்பனை செய்த பிறகு அதற்கான வாரண்ட்டி சேவைகள், ரிப்பேர் சேவைகள் மற்றும் உபகரணங்களை வாங்கி கையிருப்பு வைத்துக் கொள்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஐசிடி சர்வீஸ் மேனேஜ்மென்ட் சொல்யூஷன் நிறுவனம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஐசிடி நிறுவனத்தின் வாயிலாக விஸ்திரான் நிறுவனம் லேப்டாப் உற்பத்திக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்து கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக விஸ்திரான் நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் கர்நாடக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி கர்நாடக மாநிலத்தில் லேப்டாப் உற்பத்தி ஆலை நிறுவப்படும் என்றும் 1500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் விஸ்திரான் நிறுவனம் அறிவித்தது. இந்த கர்நாடக ஆலையில் தயார் செய்யப்படும் லேப்டாப்புகளில் 50 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என விஸ்திரான் நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஜூலை மாதத்திலேயே இந்த ஆலை கட்டமைப்பு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தான் இந்த கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன . 2026 ஆம் ஆண்டுக்குள் இந்த லேப்டாப் உற்பத்தி ஆலை பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது.
இதற்காக விஸ்திரான் நிறுவனம் கர்நாடக மாநிலத்தின் தேவனஹள்ளி மாவட்டத்தில் 32 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத் தொகுப்பை 160 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளது. இந்த இடத்தில் தான் லேப்டாப் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications