பொருளாதார நெருக்கடி மற்றும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் காரணமாக பல ஐடி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இதற்கு மத்தியில் ஒரே ஒரு IT வேலை கிடைத்து விடாதா? என்று படித்த பட்டதாரிகள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பெண் ஒருவர் ஐடி வேலையையும், ஏசி ரூமையும், லட்சங்களில் சம்பாதித்த சம்பளத்தையும் உதறி தள்ளிவிட்டு மனநிம்மதிக்காக ஆட்டோ ஓட்டும் தொழிலை தேர்ந்தெடுத்துள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் லட்சங்களில் சம்பளம் இல்லை என்றாலும் மன நிம்மதியான சம்பளம் இதிலும் அவருக்கு கிடைக்கிறது.
அந்தப் பெண் ஓட்டுநரின் ஆட்டோவில் ஏறிய நெஸ்ரின் மித்லஜ் என்ற மற்றொருவர், பெண் ஆட்டோ ஓட்டுநரைப் பற்றிய சுவாரசிய தகவல்களை பகிர்ந்திருந்தார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெஸ்ரின், "நாம் சில நேரங்களில் எதிர்பாராமல் சிலருடன் உரையாடுவோம். ஆனால் இது போன்ற உரையாடல்கள் நமக்கு வாழ்க்கையில் மிக முக்கியமான தத்துவங்களைக் கற்றுக் கொடுத்துவிடும். அப்படித்தான் இன்றும் எனக்கு ஒரு அனுபவம் கிடைத்தது. இன்று நான் போக்குவரத்திற்காக ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநரைச் சந்தித்தேன். அவர் முகத்தில் அவ்வளவு நம்பிக்கை, அழகான உடை, அனைத்திற்கும் மேலாக அவர் பேசும் பேச்சு ஒவ்வொன்றிலும் மனஅமைதி இருந்தது.

ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இந்தத் துறையில் எப்படி ஒரு பெண்ணாக ஆட்டோ ஓட்டுகிறீர்கள்? என்று அவரிடம் கேட்டேன், அதற்கு அவர் சொன்ன பதில் தான் என்னை ஆழமாக பாதித்தது. நான் இதற்கு முன்னர் ஒரு ஐடி கம்பெனியில் 9 வருடமாக மேனேஜராக இருந்தேன். லட்சங்களில் சம்பாதித்தேன். அனைவரும் மதிக்கும் பதவி தான். ஆனால் அந்தப் பதவியில் இருந்த பிரஷர், தீராத மன உளைச்சல், 24 மணி நேரமும் இருந்த பணிச்சுமை எல்லாம் சேர்ந்து ஒரு கட்டத்தில் எனக்கு பிடிக்காமல் போனது. இதனால் அதை விட்டு வெளியேறினேன். இன்று சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறேன்.
யாரிடமும் கையேந்தாமல் இதன் மூலமாகவே மாதம் 60,000 ரூபாய் வருமானம் பெறுகிறேன். அனைத்தையும் விட இப்பொழுது நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று அந்த ஆட்டோ டிரைவர் கூறியுள்ளார். இந்த கதையைக் கேட்டதும் பயணம் செய்த பெண்ணுக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே பெண் ஆட்டோ ஓட்டுனரின் கதையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ஆரம்பத்தில் பெண் ஆட்டோ ஓட்டுனரின் முடிவுக்கு குடும்பத்திலேயே எதிர்ப்பு இருந்துள்ளது. ஆனால் தனது மன நிம்மதிக்காக அனைவரின் பேச்சையும் உதறி தள்ளிவிட்டு தனக்கு பிடித்த தொழிலை தேர்ந்தெடுத்துள்ளார். என்னதான் லட்சங்களில் சம்பாதித்து மதிக்கத்தக்க பதிவில் இருந்தாலும் மன நிம்மதி இல்லை என்றால் எதிலும் சாதிக்க முடியாது.
நம்மில் பலர் இந்த விஷயம் தெரியாமலேயே ஏதோ ஒரு பதவியில் இருந்து வருகிறோம். சமூக அந்தஸ்து, கௌரவம் போன்றவற்றை கருத்தில் கொண்டு மன நிம்மதியை இழக்கிறோம். வெற்றி என்பது இங்கு ஒவ்வொருவரை பொறுத்து மாறுபடக் கூடியதுதான். ஒரு சிலருக்கு சொந்த தொழிலில் மாதம் ரூ.2 லட்சம் வருமானம் பெற வேண்டும் என்பது வெற்றியாக இருக்கும்.
அதே போல மற்றொரு நபருக்கு ஒரு நிறுவனத்தில் இருந்து பெரிய பதவிக்கு போக வேண்டும் என்பது வெற்றியாக இருக்கும். இதில் எதைத் தேர்வு செய்வது?, எதில் மன நிம்மதி இருக்கிறது என்பது அவரவரைப் பொறுத்தது. சொசைட்டிக்காக நிம்மதியை இழந்து பாடாய்படும் பலருக்கு பெண் ஓட்டுனரின் கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


Click it and Unblock the Notifications