ஒரு பொருள் மக்களிடையே சென்றடைய வேண்டுமானால் அதற்கு மார்க்கெட்டிங் என்பது மிகவும் முக்கியம். இன்றெல்லாம் மார்க்கெட்டிங் தான் பிசினஸுக்கு நன்மை பயக்கும் என்று எண்ணி பலரும் சோசியல் மீடியா தளங்களை திறம்பட பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். சரியான மார்க்கெட்டிங் இல்லை என்றால் சிறந்த தயாரிப்புகளும் விற்கப்படாமல் போகும் அபாயம் உள்ளது. இதனால் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும்.
தற்போது உள்ள நிறுவனங்கள் தங்கள் மார்க்கெட்டிங் உத்திகளை பயன்படுத்தி தனித்து நிற்கின்றன. அதற்கு உதாரணமாக நகம் இல்லாதவர்கள் பயன்படுத்தும் போலி நகங்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று சமூக ஊடகங்களில் பிரபலமாகி இருக்கிறது.

ஒரு பெண் கைகளில் ஒட்டிக் கொள்ளும் போலியான நகங்களை ஆர்டர் செய்துள்ளார். அவரின் ஆர்டருக்கு ஏற்ப நிறுவனமும் பார்சலை அனுப்பியுள்ளது. இதை வீடியோ எடுத்துக் கொண்டு அந்தப் பெண் திறக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் பார்சலை திறந்ததும் அதிர்ச்சியில் அலறிக்கொண்டு ஓடியுள்ளார். ஏனெனில் அந்த நிறுவனம் தனித்துவமான அணுகுமுறை ஒன்றை பயன்படுத்தி இருந்தது. உண்மையான தோற்றமுடைய சிலிக்கான் கைகளில் நகங்களை ஒட்டி அனுப்பியுள்ளது.
பார்ப்பதற்கு உண்மையாகவே வெட்டப்பட்ட மனித கைகளை போலவே தோற்றமளிக்கிறது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சி அந்த பெண்ணை ஷாக் ஆக்கியுள்ளது. உடனடியாக இதை வீடியோ எடுத்து அந்த பெண்ணும் சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.
வீடியோவில் பார்ப்பதற்கு என்னவோ சற்று பயத்தை தான் ஏற்படுத்துகிறது. ஏனெனில் மனித விரல்களா அல்லது சிலிக்கானா என்பதை உணரவே பார்ப்பவருக்கு சற்று நேரம் எடுக்கும். அப்படி இருக்கையில் பார்சலை திறந்த பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
பலர் இந்த அணுகுமுறையை புதுமையான மார்க்கெட்டிங் யுக்தி என்று பாராட்டினர். சிலர் இது போன்ற விஷயங்கள் மனிதர்களுக்கு தேவையற்ற பயத்தை ஏற்படுத்தும் என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். ஒரு பயனர் இது போன்ற பார்சல் பலவீனமானவர்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்தக் கூடும் என்று கருத்து தெரிவித்திருந்தார். மற்றொரு பயனர் நகைச்சுவையாக சிலர் உண்மையான கைகள் என்று நினைத்துக் கொண்டு போலீஸில் புகார் அளித்து விடுவார்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications