அமெரிக்காவின் அதிபராக 2வது முறை டொனால்டு டிரம்ப் பதவியேற்றிய பின்பு அதிகம் பேசப்படுவது 2 விஷயம், ஒன்று வர்த்தக போர், இரண்டாவது Birthright Citizenship. அதிபராகச் சீட்டில் உட்கார்ந்த முதல் நாளிலேயே கையெழுத்திட்ட ஒரு உத்தரவு தான் இந்த Birthright Citizenship முறையில் மாற்றத்தைக் கொண்டு வரும் உத்தரவு.
டிரம்ப் முதல் நாளிலேயே இந்த உத்தரவு கையெழுத்திட்டது மட்டும் அல்லாமல் அடுத்த 30 நாட்களில் நடைமுறைக்கு வரும் எனவும் உத்தரவிட்டார். இதனால் பிப்ரவரி 19-20 ஆம் தேதிகளில் இது நடைமுறைக்கு வரும் வேளையில் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு மக்கள் குறிப்பாக இந்தியர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் டிரம்ப்-ன் உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதற்காகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சியில் 2 நீதிமன்றத்தில் இதைச் செயல்படுத்தக்கூடாது என்பதற்காகத் தடை உத்தரவு விதிக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு தடை உத்தரவின் காலம் பிப்ரவரி 6ஆம் தேதி உடன் முடிவடைகிறது என்பதால் Birthright Citizenship ரத்து தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறப்புரிமை அடிப்படையில் அனைவருக்கும் குடியுரிமை வழங்கும் உரிமையை முடிவுக்குக் கொண்டு வரும் டிரம்ப் நிர்வாக உத்தரவைத் தற்காலிகமாகத் தடை செய்து மேரிலாந்து மாநிலத்தின், கிரீன்பெல்ட் மாவட்ட நீதிபதி டெபோரா போர்ட்மேன் பிப்ரவரி 5ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
இவருடைய தடை உத்தரவு வாஷிங்டன் தடை உத்தரவின் காலம் பிப்ரவரி 6ஆம் தேதி முடியும் நேரத்தில் வந்துள்ளதால் டிரம்ப் நிர்வாகத்தால் Birthright Citizenship முறையில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை நடைமுறைப்படுத்த முடியாது. ஆனால் நீதிபதி டெபோரா போர்ட்மேன் தனது தீர்ப்பில் சில முக்கியமான விஷயங்களை முன்வைத்துள்ளார். இதுதான் Birthright Citizenship முறையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க உள்ளது.
அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தத்தை டிரம்ப் நிர்வாகம் தவறாக விளக்கியதாக நீதிபதி போர்ட்மேன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படுவதை உறுதி செய்யும் இந்த அடிப்படை உரிமையை டிரம்ப் அரசு தவறாக விளக்கியதாக நீதிபதி கூறியுள்ளார்.
டிரம்ப்-ன் இந்த மாற்றத்தை எந்த நீதிமன்றமும் ஏற்காது என்று நீதிபதி போர்ட்மேன் கூறினார். Citizenship is a most precious right என்று அவர் கூறிய வாசகம் தற்போது அமெரிக்காவில் டிரெண்டாகியுள்ளது.
மேலும் நிதீபதி டெபோரா போர்ட்மேன் கூறுகையில் அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தத்தின் கீழ் பிறப்பால் குடியுரிமையை வெளிப்படையாக வழங்கப்படுகிறது என்றும், குடியுரிமை வழங்குவது தேசிய அளவிலான விஷயம், இதற்கு தேசிய அளவிலான ஒரே மாதிரியான கொள்கை தேவைப்படுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனால் தேசிய அளவிலான தடை மட்டுமே இந்த விதிமுறை மாற்றத்தைத் தடை செய்ய முடியும். இதனால் நாடு முழுவதும் வழக்குத் தொடர்ந்தவர்களின் வாயிலாகவே இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
வாஷிங்டன் மாநிலத்தில் நான்கு மாநிலங்கள் தாக்கல் செய்த தனித்தனி வழக்கில் அமெரிக்க அரசின் உத்தரவுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தற்காலிக தடை பிப்ரவரி 6, 2025 அன்று முடிவடைய உள்ளது. இந்த நிலையில் தான் மேரிலாந்து நீதிபதி போர்ட்மேனின் தற்காலிக தடை, அமெரிக்க அரசு நிர்வாகம் மேல்முறையீடு செய்யும் வரை அரசின் உத்தரவை செயல்படுத்துவதை நிறுத்தியுள்ளது.
CASA மற்றும் Asylum Seeker Advocacy Project உள்ளிட்ட குடியேறியோர் உரிமைகள் அமைப்புகள் மற்றும் தாய்மார்கள் என பல தரப்பினர் இந்த வழக்கை தாக்கல் செய்து மேரிலாந்து நீதிபதி போர்ட்மேனின் தற்காலிக தடை உத்தரவை வழங்கினார். இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் மேரிலாந்து நீதிபதி போர்ட்மேன் முன்னாள் அதிபர் ஜோ பைடன் அவர்களால் நியமிக்கப்பட்டவர்.
வாஷிங்டன் மற்றும் மேரிலாந்து வழக்குகள் மட்டும் அல்லாமல் இருபத்தி இரண்டு மாநிலங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் அரசின் உத்தரவைத் தடுக்க வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் மற்றும் அடுத்த சில நாட்களில் இந்த வழக்குகள் விசாரணைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications