வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டையும், அலுவலக பணியை நிர்வாகம் செய்வதற்கு மத்தியில் அவர்களுடைய உடல் நலம் குறித்து மறந்துவிடுகின்றனர். பெண்களின் ஆரோக்கியத்தில் தனிநபராக கவனம் செலுத்துவதை தாண்டி குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
நம் உடல் சீராக வேலை செய்வதற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமாகும்.
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் உடலின் இயக்கத்துக்கு மிகவும் அத்தியாவசியமாகும். பிரசவகாலத்தின்போது பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு பற்றாக்குறை ஏற்படலாம். இதனால் பிறக்கப்போகும் சிசுவுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

பெண்கள் தங்களது மாதவிலக்கு காலங்களில் ரத்தப்போக்கு ஏற்படும் என்பதால் உடலில் உள்ள இரும்புச்சத்து குறையும். இதனால் இழந்த இரும்புச்சத்தை திரும்பப்பெறுவதற்கு போதிய ஊட்டச்சத்துகளை சாப்பிட வேண்டும். பிரசவ காலத்தில் குறிப்பாக இரும்புச்சத்து போதிய அளவு இருந்தால்தான் குழந்தைக்கு நல்லது.
காய்கறிகளில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்தை உடலானது உடனடியாகக் கிரகிக்கும் தன்மையுடையது. எனவே கர்ப்பிணிகள் பிரசவகாலத்தில் நிறைய சைவ உணவுகளை சாப்பிட வேண்டும். உணவு முறையில் சிறிய மாற்றங்களைச் செய்தாலே இரும்புச்சத்து பற்றாக்குறையை தடுத்து விடலாம்.
இரும்புச்சத்தை பெறுவதற்கான பல்வேறு வழிகள் பற்றி இனி பார்க்கலாம்.
உங்கள் உணவில் கொழுப்பு குறைவான இறைச்சி, கோழி, கடல் உணவுகள், பீன்ஸ், பருப்பு, கீரைகள், பிராக்கோலி, தானியங்கள் மற்றும் பிரட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் அபரிமிதமான இரும்புச்சத்து உள்ளது.
இரும்புச்சத்து நிறைந்த உணவுடன் வைட்டமின் சி உள்ள உணவுகள் பானங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.இத்துடன் இரும்புச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளையும் சிட்ரஸ் பழங்களையும் சாப்பிட வேண்டும்.
இரும்புச்சத்தை குறைக்கக்கூடிய காபி, டீ, கால்சியம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவுகளை சமைக்கும்போது இரும்புச்சட்டியை பயன்படுத்துங்கள். பான், இரும்புச்சட்டியில் சமைத்தால் அதிலிருந்து இரும்புச்சத்து கூடுதலாகக் கிடைக்கும்.
சில நேரங்களில் இரும்புச்சத்து பற்றாக்குறையை தவிர்க்க டானிக்குகளை டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். கர்ப்பகாலத்தில் கடுமையான இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படும் என்பதால் ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையைப் பெற்று தகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
மாதவிலக்கின்போது அதிகளவில் ரத்தப்போக்கு இருந்தால் இரும்புச்சத்து குறைவு, ரத்த சோகை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். எனவே அதற்குத் தகுந்தாற்போல மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரைகள், உணவுகளை சாப்பிட வேண்டும்.
வைட்டமின் பி12 இரும்புச்சத்து கிரகிப்பை அதிகரிக்கும் என்பதால் உணவுடன் இறைச்சி, மீன், பால் பொருட்கள், தானியங்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். உணவில் தயிர் போன்ற புரோபயாடிக் மற்றும் நார்ச்சத்து நிரம்பிய உணவை சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் ஏற்படாது. அத்துடன் உங்கள் குடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
இரும்புச்சத்து பற்றாக்குறை இருப்பவர்கள் அவ்வப்போது அதனை பரிசோதித்து தகுந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரும்புச்சத்து குறைபாட்டை சுய-கண்டறிதல் மற்றும் மருத்துவர்கள் வழிகாட்டுதல் இல்லாமல் கூடுதல் மருந்துகளைத் தொடங்குவது பரிந்துரைக்கப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு தனிநபரின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் மருத்துவ நிபுணர் பொருத்தமான ஆலோசனையை வழங்க முடியும். இந்த உதவிக்குறிப்புகள் தொழில்முறை ஆலோசனையுடன் மட்டுமே பின்பற்றப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications