தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணித்து வரும் வேளையில், நகரத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் அதேவேளையில் பொழுதுபோக்கு கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டியது கட்டாயமாகும். இதற்காகவே கடந்த சில வருடங்களாகச் சென்னையின் இரவு நேரத்தைச் சிறப்பானதாக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு அடுத்தகட்டமாகப் பொழுதுபோக்குத் துறையில் தியேட்டர், பார்க் ஆகியவற்றைத் தாண்டி தீம் பார்க் போன்ற பெரும் அம்சங்களும் நகரின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்பதால் சில முக்கியச் சலுகை உடன் இந்தியாவில் பிரபலமான WonderLa சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட உள்ளது.

இந்த மாபெரும் அம்யூஸ்மென்ட் பார்க் எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ளப் பலரும் ஆர்வமாக இருக்கும் வேளையில் டிவிட்டரில் வொண்டர்லா அம்யூஸ்மென்ட் பார்க்ஸ் மற்றும் ரிசார்ட்டின் நிர்வாக இயக்குநர் அருண் சிட்டிலப்பிள்ளி ஒரு போட்டோ-வை வெளியிட்டு அதகளப்படுத்தியுள்ளார். இந்தப் போட்டோவில் நிறையத் திட்டமிடுகிறோம்.. எனவும் அருண் குறிப்பிட்டு உள்ளார்.
சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வொண்டர்லா ஹாலிடேஸ் நிறுவனம் சென்னை அருகே பொழுதுபோக்குப் பூங்கா தொடங்க ஒப்புதல் மற்றும் அனுமதி பெற்றுள்ளது. இந்தத் திட்டம் ஜூன் 2025 க்குள் முடிக்கப்படும் என்று அருண் சிட்டிலப்பிள்ளி கடந்த மாதம் கூறினார்.
இந்த மாபெரும் தீம் பார்க் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகாவில் உள்ள இல்லலூர் கிராமத்தில் சுமார் 62 ஏக்கர் பரப்பளவில் சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது.
2015 இல் நடந்த தமிழ்நாட்டின் முதல் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் சென்னையில் அம்யூஸ்மென்ட் மற்றும் ரெஸ்சார்ட் கட்டுவதற்கு வொண்டர்லா நிறுவனம் தமிழ்நாடு அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஆனால் 10 சதவீத கூடுதல் LBT எனப்படும் லோக்கர் பாடி டாக்ஸ் பிரச்சனை தொடர்பாகக் கட்டுமான பணிகள் துவங்கப்படாமல் இருந்தது. தற்போது 10 வருட வரி விடுமுறையைத் தமிழக அரசு கொடுத்துள்ள காரணத்தால் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு 2025-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட சுற்றுலா துறை கொள்கையில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைச் சுற்றுலா துறை வாயிலாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்த 5 வருடத்தில் சுமார் 20000 கோடி ரூபாய் முதலீட்டைச் சுற்றுலா துறை சார்ந்து ஈர்க்க இந்தக் கொள்கை மூலம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட சுற்றுலா துறை கொள்கையில் அம்யூஸ்மென்ட் பார்க், தீம் பார்க் பிரிவில் வரும் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications