இந்தியாவில் 2020 முதல் கொரோனா தொற்றுக் காரணமாக ஐடி ஊழியர்கள் மட்டும் அல்லாமல் அனைத்துத் துறை ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்ற துவங்கிய நிலையில், இந்த மாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து மத்திய அரசும் தொழிலாளர் சட்டத்தில் வொர்க் பரம் ஹோம், வொர்க் பரம் எனிவேர், ப்ரீலேன்சர் போன்ற அனைத்து வேலைவாய்ப்புக் கட்டமைப்பு மாற்றங்களைச் சட்டதிட்டத்தில் கொண்டு வந்தது.
இதன் பின்பு ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் தற்போது நீண்ட கால அடிப்படையில் வொர்க் பரம் எனிவேர் எனப் பிரிவின் கீழ் ஊழியர்களைப் பணியில் அமர்த்த துவங்கியுள்ளனர்.
2ஆம் தர நகரங்கள்
இந்தியாவில் 2ஆம் தர நகரங்கள் அதாவது சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெரு நகரங்களைத் தாண்டி அதிகளவிலான ஊழியர்களைக் கோவை, சேலம், மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து ஊழியர்களைப் பணியில் அமர்த்தி வருகின்றனர். அதுக்கு என்ன இப்போ என்று தானே கேட்கிறீங்க.. இருங்க விஷயத்திற்கு வரேன்.
சம்பள வித்தியாசம்
பொதுவாக 2ஆம் தர நகரங்களில் இருக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவான அளவில் தான் சம்பளம் கொடுக்கும், ஆனால் ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் பெரு நகரங்களில் அதிகப்படியான சம்பளம் அளித்து வருகிறது.
சம்பள உயர்வு
இவை இரண்டும் ஒன்று சேரும் போது ஒருபக்கம் நிறுவனங்களின் செலவுகள் சற்று குறைவானாலும் 2ஆம் தர நகரங்களில் இருக்கும் ஊழியர்களின் சம்பளம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர உள்ளது.
டாப் 10 நகரங்கள்
சமீபத்தில் சம்பளம் அதிகரிக்கப்பட்டு உள்ளது டாப் 10 2ஆம் தர நகரங்கள் பட்டியலை Randstad வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. அகமதாபாத், சண்டிகர், திருவனந்தபுரம், புவனேஸ்வர், நாக்பூர், இந்தூர், ஜெய்ப்பூர் மற்றும் வதோதரா ஆகியவை இடம்பெற்றுள்ளது.
சண்டிகர்
இந்நிலையில் Randstad இந்தியாவில் வேகமாகச் சம்பளத்தில் உயர்வைக் காணும் 2ஆம் தர நகரமாகச் சண்டிகர் உருவெடுத்துள்ளது. சண்டிகரில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்குச் சில மாதங்களுக்கு முன்பு 4.4 முதல் 11 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளம் மட்டும் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 5.7 முதல் 13.7 லட்சம் ரூபாய் வரையில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது ஜூனியர் முதல் மிட் லெவல் ஊழியர்களுக்கான சம்பளம்.
சீனியர் பிரிவு ஊழியர்கள்
இதுவே சீனியர் பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்குச் சண்டிகரில் 26.5 லட்சம் ரூபாயும், புவனேஸ்வர் 31.2 லட்சம் ரூபாயும், கொச்சியில் 28.8 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்தில் சமீப காலத்தில் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவே மும்பையில் 35.7 லட்சம் ரூபாய், என்சிஆர்-ல் 32.7 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.
சம்பள வித்தியாசம் சரிவு
வொர்க் பரம் ஹோம் மற்றும் ஊழியர்களுக்கான டிமாண்ட், சம்பள வித்தியாசம் ஆகியவை பெரு நகரங்களுக்கும், 2ஆம் தர நகரங்களுக்கும் மத்தியில் பெரிய அளவில் குறைந்துள்ளது.
பெரு டெக் நிறுவனங்கள்
இதன் மூலம் அடுத்த 1 முதல் 2 வருடத்தில் பெரு டெக் நிறுவனங்களும் புதிய ஐடி ஊழியர்களுக்காக 2ஆம் தர நகரங்களுக்குத் தான் வர வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது.
திறன்
இது ஐடி துறைக்கு மட்டும் அல்லாமல் ஆன்லைன், டிஜிட்டல் சேவை பிரிவில் இருக்கும் அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும், துறை சார்ந்த நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதனால் சிறிய நகரங்களில் இருக்கும் மாணவர்கள் திறனை வளர்த்துக் கொண்டால் மட்டும் போதும் அதிகச் சம்பளத்தில் வேலைவாய்ப்பு உங்கள் வீட்டு வாசலில் உள்ளது.
வர்த்தகம் மற்றும் பொருளாதாரம்
ஏற்கனவே பல சிறு மற்றும் நடுத்தர நகரங்கள் 2ஆம் தர நகரங்களுக்கு வந்துள்ள நிலையில் இது நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications