டெல்லி: சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே தலைநகர் அமராவதிக்கான பணிகளை தொடங்கிவிட்டார். அமராவதியை சர்வதேச தரத்திலான நகரமாக மாற்றுவது தான் அவரது இலக்கு. இதற்கு பல்வேறு நிறுவனங்களை முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் அமராவதியை கட்டமைக்கும் பணிகளுக்காக உலக வங்கி 15000 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதத்தில் இருந்து அமராவதி தலைநகரத்தை கட்டமைக்கும் பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே டிசம்பர் முதல் அமராவதி கட்டுமான பணிகள் வேகமெடுக்க உள்ளது.

முன்னதாக தலைநகர் டெல்லிக்கு சென்று இருந்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்களை இரண்டு நாட்களாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை அடுத்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு போளவரம் நீர் பாசன திட்டத்திற்காக மத்திய அரசு 12,500 கோடி வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்ததாக கூறினார்.
மேலும் ஆந்திராவில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் 85,000 கோடி ரூபாய் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க இருப்பதாகவும் இதற்காக தற்போது பிபிசிஎல் நிறுவனம் ஆந்திராவில் இடத்தை இறுதி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது என்றும் கூறினார்.
விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளான்ட் தொடர்பாக தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனையை தீர்ப்பது தொடர்பாக இரு மாநில அரசுகளும் தீவிரமான பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறியுள்ள. இதனை செயிலுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர் மத்திய அரசிடம் இது தொடர்பான பரிந்துரையை வழங்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக சந்திரபாபு நாயுடு மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து ஆந்திர மாநிலத்தில் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
குறிப்பாக விஜயவாடா கிழக்கு பைபாஸ் மற்றும் பிற மாநில நெடுஞ்சாலை திட்டங்களுக்கான நிதிகளை ஒதுக்கீடு செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. மேலும் குப்பம் - ஓசூர் இடையிலான நெடுஞ்சலாஇ திட்டத்தினை வேகப்படுத்த வேண்டும் எனவும் அவர் நிதின் கட்கரிடம் கேட்டு கொண்டார்.
விஜயவாடா - ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் தற்போது நான்கு வழிச்சாலையாக இருக்கும் நிலையில் அதனை எட்டு வழி சாலையாக உயர்த்த வேண்டும் என நிதின் கட்கரியிடம் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல ஹைதராபாத் மற்றும் அமராவதி இடையே எக்ஸ்பிரஸ்வே அமைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications