ஐசிசி உலகக் கோப்பை 2023 2வது அரையிறுதி போட்டியில் பலரும் எதிர்பார்த்தபடியே தென்னாப்பிரிக்கா அணி சொதப்பி வரும் வேளையில், ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ஸ்கெட்ச் போட துவங்கியுள்ளது.
இந்த முறை உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடக்கும் காரணத்தால் கிரிக்கெட் ரசிகர்களைக் கையில் பிடிக்க முடியவில்லை. அதிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியா நுழைந்ததில் இருந்து எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலகக் கோப்பை இறுதி போட்டியை நேரில் காண பெரும் மக்கள் கூட்டம் ஆர்வமாக உள்ளது. குஜராத் என்பதாலும், உலகக் கோப்பை இறுதி போட்டி என்பதாலும் பிரதமர் உட்படப் பெரும் தலைகள் அதிகமானோர் வர வாய்ப்புகள் உள்ளது.
இதனால் உலகக் கோப்பை இறுதி போட்டிக்கான டிக்கெட் டிமாண்ட் அதிகரித்து விலையும் அதிகரித்துள்ளது, இதேபோல் உலகக் கோப்பை அட்டவணை வெளியான நாளில் இருந்து நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்து அகமதாபாத்-க்கு வரும் விமான டிக்கெட் விலை தாறுமாறாக அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
நவம்பர் 19ஆம் தேதி மதியம் 2 மணிக்கு போட்டி நடக்கும் வேளையில் சென்னையில் இருந்து அகமதாபாத்-க்கு நவம்பர் 18ஆம் தேதி செல்ல 15000 ரூபாய் முதல் டிக்கெட் விலை துவங்குகிறது. இதுவே நவம்பர் 19 ஆம் தேதி காலை 18000 முதல் 20000 ரூபாய் கட்டணம் வைக்கப்பட்டு உள்ளது. இதுவே பெங்களூர் என்றால் 24000 ரூபாயில் இருந்து டிக்கெட் கட்டணம் துவங்குகிறது. இது இயல்பான நாட்களை ஒப்பிடுகையில் 300 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்ச் டிக்கெட், விமான டிக்கெட் கட்டணம் தான் இப்படி இருக்கிறது என்றால் ஹோட்டலில் ஒரு நாள் தங்க 1 லட்சம் ரூபாய் அசால்டாகக் கேட்கப்படுகிறது. ஐசிசி உலகக் கோப்பை 2023 அட்டவணை சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டவுடன் கிரிக்கெட் ஆர்வலர்கள் விரைவில் அகமதாபாத்திற்குத் தங்கள் பயணத்தைத் திட்டமிடத் தொடங்கினர்.
இந்தியா இறுதிப் போட்டிக்கு வருவதற்கு முன்பே இறுதி போட்டியை காண ஆர்வமாக இருந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். இப்போது இறுதி போட்டிக்கு நுழைந்த நிலையில் ஹோட்டல்கள் ஒரு இரவுக்குச் சுமார் 24,000 ரூபாயில் இருந்து ஒரு இரவுக்கு 2,15,000 ரூபாய் வரையில் வசூலிக்கிறது.
உலகக் கோப்பை இறுதி போட்டி காரணமாக மிகவும் அடிப்படையான ஹோட்டல் அறைக்குக் கூட ஒரு இரவுக்கு ரூ.10,000 ரூபாய் வசூலிக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஆரம்ப விலையே 1 லட்சத்தை நெருங்குகிறது.
அக்டோபர் 15 அன்று அகமதாபாத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியின் போது ஹோட்டல்கள் மற்றும் டிக்கெட் விலைகள் உயர்ந்தபோது இத்தகைய போக்குக் காணப்பட்டது. தற்போது இதைவிடவும் பல மடங்கு டிமாண்ட்-ம் விலையும் அதிகரித்துக் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications