கரியமில வாயு வெளியேற்றம் காரணமாக பூமி முன்பை விட வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதன் காரணமாக பருவநிலை மாற்றமடைந்து பல்வேறு பாதிப்புகளை நாம் சந்திக்கிறோம்.
இந்நிலையில் பருவ நிலை மாற்றம் காரணமாக 2050 ஆம் ஆண்டு இந்த உலகமே வறுமைக்குச் சென்று விடும் என அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

பருவநிலை மாற்றம் நமது அன்றாட வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. வறட்சி , போதிய மழையின்மை, அதீத மழை பெய்வது, வெள்ளப்பெருக்கு என நாம் கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நாம் அனுபவித்து வருகிறோம்.
இந்த நிலையில் நேச்சர் என்ற அறிவியல் இதழில் ஒரு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பருவநிலை மாற்ற மாறுபாடுகள் காரணமாக 2050 ஆம் ஆண்டு உலகத்தின் மொத்த வருவாயில் 19 சதவிகிதம் குறைந்துவிடும் என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உலக அளவில் வருவாய், பொருளாதார வளர்ச்சியில் அதிகப்படியான மாற்றங்களையும் தாக்கத்தையும் எதிர்கொண்டு வருகிறோம். ஏழை மக்கள் தொடர்ந்து ஏழைகளாகவும் பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரர்களாகவும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இப்படி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்ற மாறுபாடுகள் தீவிர வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொள்வோம் என இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பூமியின் வெப்பநிலை அதிகரிப்பது அதீத மழை பொழிவு, அடிக்கடி மாறும் வானிலை நிகழ்வுகள் ஆகியவை காரணமாக 2050 ஆம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரம் 38 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பை சந்திக்கும் என கூறியுள்ளது.
பருவநிலை மாற்றத்தினால் நாம் சந்திக்கப் போகும் விளைவுகளை தடுப்பதற்கு உலக நாடுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.
உயர்ந்த அட்சரேகை இருக்கக்கூடிய இடங்களில் பெரிய அளவு பாதிப்புகள் இருக்காது என்றும் இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. குறைந்த அட்சரேகை பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் அங்கு இருக்கும் நாடுகளுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்ற மாறுபாடுகளால் இந்த வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்களின் வருமானம் 11% குறையும் என்றும், தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மக்களின் வருவாய் 22% குறையும் என்றும் இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
பருவநிலை மாற்றம் என்பது மனித குலத்திற்கே அச்சுறுத்தலாகி வருகிறது.
பனிப்பாறைகள் உருகுவது, கடல்நீர் மட்டம் அதிகரிப்பது ஆகிய பிரச்னைகளால் கடலை ஒட்டியுள்ள நகரங்களும், தீவு நாடுகளும் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண உலக நாடுகள் குறிப்பாக வளர்ந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன் வைக்கப்பட்டு வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications