வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற பில்லியனர்களில் ஒருவரும், ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான ட்ரோங் மி லான் (Truong My Lan), தனது வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறார். உலகின் மிகப்பெரிய வங்கிக் குற்றங்களில் ஒன்றை மூளையாக இருந்து அரங்கேற்றிய அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தண்டனையை குறைக்க மேல்முறையீடு செய்து வரும் அவருக்கு, இன்று மிகப்பெரிய பின்னடைவு நடந்துள்ளது.
68 வயதான ட்ரோங் மி லான்-க்கு (Truong My Lan) மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் வியட்நாமின் சட்டம் ஒரு சிறு நம்பிக்கையை அளிக்கிறது. அவர் திருடிய நிதியில் 75% ஐ திருப்பிச் செலுத்தினால், அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றப்படும் என்ற முக்கியமான சலுகையை கொடுத்துள்ளது.

இந்த மெகா வங்கி மோசடி தொடர்பாக ஏப்ரல் மாதம் முதல் முறையாக விசாரணை நடந்தது, இதில் ட்ரோங் மி லான் வியட்நாம் நாட்டின் ஐந்தாவது பெரிய வங்கியான சைகான் கமர்சியல் வங்கியை (Saigon Commercial Bank) மறைமுகமாக கட்டுப்படுத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளது தெரிய வந்தது.
இந்த ஆதிக்கத்தை பயன்படுத்தி ட்ரோங் மி லான், Saigon Commercial Bank-ல் இருந்து தான் உருவாக்கிய மிகவும் சிக்கலான போலி நிறுவனங்களின் வலையமைப்பின் மூலம், கடந்த 10 வருடங்களாக சட்டவிரோதமாக கடன் மற்றும் பணத்தைப் எடுத்தும், பரிமாற்றம் செய்தும் உள்ளார். ட்ரோங் மி லான் திருடிய மொத்தத் தொகை அதிர்ச்சியூட்டும் வகையில் 44 பில்லியன் டாலராக இருந்தது கண்டுப்படிக்கப்பட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த வழக்கை வாதாடிய குற்றவியல் வழக்கறிஞர்கள், இந்த 44 பில்லியன் டாலர் நிதியில், சுமார் 27 பில்லியன் டாலர் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், 12 பில்லியன் டாலர் கையாடல் செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த கடுமையான நிதி குற்றம் அவரது மரண தண்டனைக்கு வழிவகுத்தது.
இந்த தீர்ப்பு அரிதானதாகவும் அதிர்ச்சியூட்டும் விதமாகவும் இருந்தது, காரணம் பொதுவாக வொயிட் காலர் குற்றத்திற்காக மரண தண்டனைக்கு விதிக்கப்படுவது அரிது, அதிலும் வியட்நாம் நாட்டில் ஒருசில பெண்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட நிலையில், ட்ரோங் மி லான்-க்கிற்கு வியட்நாம் நாட்டின் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பில், நீதிபதிகள் ட்ரோங் மி லானின் மரண தண்டனையைக் குறைக்க எந்த கரிசனமும் இல்லை என்று அதிரடி தீர்பளித்தார். இருப்பினும், அவர் திருடப்பட்ட 12 பில்லியன் டாலர் தொகையில் மூன்றில் இரண்டு பங்கான 9 பில்லியன் டாலரை திருப்பிச் செலுத்தினால், அவர் தூக்கிலிடப்படுவதைத் தவிர்க்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ட்ரோங் மி லான் இதை தொடர்ந்து இறுதி முயற்சியாக வியட்நாம் நாட்டின் குடியரசுத் தலைவரின் மன்னிப்பை நாடுவதற்கான வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
அழகு சாதன பொருட்களை விற்பனை செய்வது மூலம் தொழில்துறையில் நுழைந்த ட்ரோங் மி லான் (Truong My Lan), வியட்நாம் நாட்டில் 1986ல் நடந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை காலத்தில் ரியல் எஸ்டேட்டில் நுழைந்து நிலம், வீடு வாங்கி விற்கும் பணிகளையை செய்தார்.
1990களில் மிகப்பெரிய ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரென்ட்களின் உரிமையாளராகி, இன்று Van Thinh Phat Group என்ற மாபெரும் ரியல் எஸ்டேட் சாம்ராஜ்ஜியத்திற்கு தலைவர் ஆனார் ட்ரோங் மி லான் (Truong My Lan). இந்த மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 85 பேருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications