உலக அளவில் மிகப் பெரிய ஆடம்பரமான வீடு யார் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டால் எல்லாருமே அநேகமாக இந்தியாவின் முதல் செல்வந்தர் முகேஷ் அம்பானியையும் அவரது குடும்பத்தினரையும் நோக்கித்தான் கையைக் காட்டுவார்கள்.
அம்பானி குடும்பம் வசிக்கும் சொகுசு மாளிகையான ஆன்டிலியாதான் உலகிலேயே மிகப் பெரிய வீடு என்று பெரும்பாலானவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. உண்மையிலேயே உலகின் மிகப் பெரிய சொகுசான ஆடம்பர வீட்டுக்குச் சொந்தக்காரர் புருனை நாட்டின் சுல்தான் ஹஸ்ஸானல் போல்கியா. அவரது இல்லத்தின் பெயர் இஸ்தானா நூருல் இமான்.

இஸ்தானா நூருல் இமான் அரண்மனைதான் புருனை சுல்தானின் அதிகாரப்பூர்வ இல்லம். புருனையின் பிரதமராகவும் சுல்தான் போல்கியா பதவி வகிக்கிறார். இந்த வீட்டில் போல்கியா பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். நாட்டின் சுல்தானாக அவர் பதவியேற்ற காலத்தில் இருந்தே இங்கு வசிக்கிறார்.
சுல்தான் போல்கியாவின் வீடு பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய வீடாகும். முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா, லட்சுமி விலாஸ் அரண்மனையைக் காட்டிலும் மிகப் பெரியது.
முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா சுமார் 4 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது. குஜராத்தில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனை சுமார் 8 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது. ஆனால் புருனை சுல்தானின் வீடான இஸ்தானா நூருல் இமான் சுமார் 22 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது.
இஸ்தானா நூருல் இமான் என்ற பெயருக்கு ஒளி மற்றும் நம்பிக்கையின் அரண்மனை என்று அர்த்தம். ஒழுங்காக சீராக்கப்பட்ட புல்வெளி, தங்கத்திலான கும்பங்கள், பிரமாண்டமான கண்ணாடி கதவுகளைக் கொண்டது. புருனை அரண்மனை உலகின் பெரிய அரண்மனை என்று உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

பக்கிங்ஹாம் அரண்மனை, லூவர், தி ஃபர்பிடன் சிட்டி ஆகியவற்றைக் காட்டிலும் விஸ்வரூபம் கொண்டது.
1960களில் இருந்து இந்த அரண்மனையில் புருனை சுல்தான் குடியிருந்து வருகிறார். இதில் 7000 சொகுசு கார்களை சுல்தான் வைத்துள்ளார். ஒட்டுமொத்த கார்களின் மதிப்பு 5 பில்லியன் டாலர்களாகும். இந்திய மதிப்பில் 41 ஆயிரத்து 600 கோடி ரூபாயாகும்.
இஸ்தானா நூருல் இமான் 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு மதிப்பிட்டாலும் அதன் நிகர மதிப்பு சுமார் 2.49 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது. அரண்மனை கட்டடம் முழுவதும் சலவைக் கற்களாலும், விலை உயர்ந்த அரிய வகை கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. பகுதி பகுதியாக பல ரக கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதில் அமைக்கப்பட்டுள்ள கும்பங்கள் தங்கத்தில் செய்யப்பட்டவை. இந்த வீடு புருனை சுல்தானுக்கு மிகவும் ராசியானதாகக் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications