உலக பணக்காரர்கள் பட்டியலில் பல வருடங்களாக முதல் இடத்தை ஆச்சி செய்து வந்த பில் கேட்ஸ்-ஐ, கிளவுட் சேவை மற்றும் ஈகாமர்ஸ் வளர்ச்சி காரணமாக முதல் முறையாக ஜெப் பெசோஸ் பின்னுக்குத் தள்ளிய வரலாற்றுச் சம்பவம் யாராலும் மறக்க முடியாது.
இதை தொடர்ந்து ஜெப் பெசோஸ் பல காலாண்டுகளாக முதல் இடத்தை ஆட்சி செய்து வந்த நிலையில், அப்பனுக்கு அப்பன் ஒருத்தன் இருப்பான் என்பது போல டெஸ்லா வளர்ச்சி மூலம் எலான் மஸ்க் முதல் இடத்தை தட்டிச்சென்றார்.

இதேபோல் கொரோனா தொற்று காலத்தில் ஆடம்பர பொருட்களுக்கான சந்தைக்கான டிமாண்ட் அதிகமாக இருந்த வேளையில் LVMH நிறுவனத்தின் தலைவர் பெர்னால்ட் அர்னால்டு சில காலம் தக்கவைத்திருந்தார்.
ஆனால் கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்தைத் தக்கவைத்திருந்த எலான் மஸ்க் தனது அந்தஸ்தை இழந்துள்ளார். இந்த சரிவுக்கு முக்கியமான காரணம் பங்குச்சந்தை.
டெஸ்லா நிறுவனப் பங்குகள் திங்கட்கிழமை வர்த்தகத்தில் சுமார் 7.2% சரிந்த பிறகு, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் எலான் மஸ்க் தனது முதலிடத்தை இழந்தார். இதன் மூலம் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதல் இடத்திற்கு முன்னேறினார்.
தற்போது எலான் மஸ்க் 197.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் இன்டெக்ஸ் பட்டியலில் 2வது இடத்திலும், அமேசான் ஜெஃப் பெசோஸ் 200.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்திலும் உள்ளனர்.
2021ஆம் ஆண்டுக்குப் பிறகு, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது இதுதான் முதல் முறை.
எலான் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் இருவரின் சொத்து மதிப்புக்கு இடையேயான இடைவெளி ஒரு காலத்தில் 142 பில்லியன் டாலர்களாக இருந்தது, ஆனால் அமேசான் மற்றும் டெஸ்லா பங்குகள் எதிர் எதிர் திசையில் பயணிக்க, இந்த இடைவெளி குறைந்தது.
இந்த இரு நிறுவனங்களும் அமெரிக்கப் பங்குச் சந்தையின் ஆதிக்கம் செலுத்தும் "Magnificent Seven" பங்குகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் இரு நிறுவனப் பங்குகளைப் பார்க்கும்போது மாறுபட்ட பாதையில் செல்கிறது.
அமேசான் பங்குகள் 2022ஆம் ஆண்டின் இறுதியில் இருந்த அளவீட்டை ஒப்பிடுகையில் இதன் பங்கு மதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. இதேபோல் உச்சபட்ச மதிப்பை எட்டும் நிலையை நெருங்கி வருகிறது. ஈகாமர்ஸ் மற்றும் ரீடைல் வர்த்தகத்தில் அமேசான் வளர்ந்து வருவது ஜெப் பெசோஸ்-க்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஆனால் எலான் மஸ்க்-ன் டெஸ்லா பங்குகளைப் பார்க்கும் போது 2021ஆம் ஆண்டு உச்சபட்ச மதிப்பிலிருந்து இப்போது சுமார் 50% சரிந்துள்ளன. டெஸ்லா கடந்த 3 வருடத்தில் அதிகப்படியான சவால்களை எதிர்கொண்டு வருகிறது, 2021ல் போட்டிக்கு யாருமே இல்லாமல் இருந்த காலகட்டம். ஆனால் 2024ல் எலக்ட்ரிக் கார் விற்பணையில் டெஸ்லா-வை 2ஆம் இடத்திற்குத் தள்ளி முதல் இடத்தை சீனாவின் BYD பிடிக்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.
சீனா-வின் ஷாங்காய் தொழிற்சாலையிலிருந்து டெஸ்லா கார்களின் விற்பனை கடந்த ஓராண்டு காலத்தில் இல்லாத அளவு குறைந்துள்ள தரவுகள் வாயிலாக திங்கட்கிழமை வர்த்தகத்தில் டெஸ்லா பங்குகள் சரிந்தன.
அதே நேரத்தில், தொற்றுநோய் பரவல் தொடக்க காலத்திற்குப் பிறகு, சிறந்த ஆன்லைன் விற்பனை வளர்ச்சியை அமேசான் தற்போது கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications