கலிபோர்னியா: தற்போதுள்ள தலைமுறையிடம் வீடியோ அடிப்படையிலான சமூகவலைதளங்கள் தான் மிகவும் டிரெண்டாக உள்ளன. இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ், யூடியூப்பின் ஷார்ட்ஸ் மற்றும் டிக்டாக் ஆகியவற்றின் வளர்ச்சியே இதற்கு உதாரணம். இந்த நிலையில் எலன் மஸ்க் இவற்றுக்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் வீடியோ பகிர்வை மட்டுமே அடிப்படையாக கொண்ட ஒரு அம்சத்தை அறிமுகம் செய்ய இருக்கிறார்.
ரீல்ஸ், ஷார்ட்ஸ் மற்றும் டிக்டாக்கிற்கு சவால் விடும் வகையில் வீடியோவை மட்டுமே பகிரக் கூடிய வகையிலான அம்சத்தை எக்ஸ் தளத்தில் சேர்ப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சிறப்பு அம்சமானது குறிப்பிட்ட பயனாளர்களுக்கு மட்டும் பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் வெற்றியை தொடர்ந்து அனைத்து பயனாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எலன் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றினார். இதனை அடுத்து அதற்கு எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார். பின்னர் எக்ஸ் தளத்தில் பல மாற்றங்களும் கொண்டு வரப்பட்டன. எக்ஸ் தளத்தை நம்பர் ஒன் சமூக வலைத்தளமாக மாற்ற வேண்டும் என களமிறங்கி இருக்கும் மஸ்க், தற்போது மிகவும் டிமாண்ட் ஆகவும் டிரெண்டாகவும் இருக்கக்கூடிய வீடியோ அடிப்படையிலான பகிர்வுகளை தங்களது தளத்தில் கொண்டு வரும் முயற்சிகளில் களமிறங்கியுள்ளார்.
ஏற்கனவே இது டிவிட்டராக செயல்பட்டு கொண்டிருந்த போது வைன் என்ற ஒரு வீடியோ பகிர்வு முறை பயன்பாட்டில் இருந்தது. வீடியோக்களை மறு ஆக்கம் செய்து பதிவிட இது ஊக்குவித்தது. ஐஸ் பக்கெட் சவால்கள் எல்லாம் இதனால் தான் பிரபலமாகின. கடந்த ஏப்ரல் மாதம் எக்ஸ் தளத்தில் ஒரு வாக்கெடுப்பை நடத்திய எலன் மஸ்க் மீண்டும் வைன் அம்சத்தை கொண்டு வரலாமா என கேட்டிருந்தார். அதற்கு 70% பேர் கொண்டு வரலாம் என தெரிவித்திருந்தனர்.
எக்ஸ் தளத்தில் புதிதாக கொண்டு வரப்பட இருக்கும் வீடியோ பகிர்வு அம்சத்தில் குறுகிய மற்றும் நீண்ட வடிவ வீடியோக்களை பகிர முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அது மட்டுமில்லாமல் நேரலையாக வீடியோக்களை ஒளிபரப்ப கூடிய ஒரு சிறப்பு அம்சமும் சேர்க்கப்பட இருப்பதாக தெரிகிறது. இதற்காக பல்வேறு பிரபலங்களுடனும் விளையாட்டு வீரர்களுடனும் ஊடக நிறுவனங்களுடனும் சிறப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
எக்ஸ் தலைமை செயல் அதிகாரி தானாகவே தலைமை ஏற்று சிறப்பு கவனம் செலுத்தி இதனை டெவலப் செய்து வருவதாகவும் தெரிகிறது. இது தவிர எக்ஸ் தனமானது பல்வேறு பிரபலங்களுடன் எக்ஸ்க்ளூசிவான நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்ய உள்ளது. அண்மையில் கூட அமெரிக்காவின் முன்னாள் எம்பி துளசி கபார்ட் எக்ஸ் தளத்துடன் இணைந்து ஒரு புதிய நிகழ்ச்சியை நடத்த போக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications