இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை இன்று கொண்டாடும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசியாவிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடுகளாக இருக்கும் இந்தியா சீனா மத்தியிலான உறவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த நிலையில் ஜி ஜின்பிங் வாழ்த்தில் வந்த செய்தி இரு நாடுகளுக்கிடையேயான உறவில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி ஜின்பிங் தனது செய்தியில் இந்தியாவையும் சீனாவையும் "நல்ல அண்டை நாடுகள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள்" என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டில் இரு நாடுகளுக்கிடையேயான உறவு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், இரு நாடுகளின் நடப்பு உலக அமைதி மற்றும் செழிப்புக்கு முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக நாடுகள் இந்தியா, சீனா வளர்ச்சியை "Dragon and the Elephant dancing together" என அழைப்பது வழக்கம், இதையும் தனது செய்தியில் பயன்படுத்தி ஜி ஜின்பிங் கூறியுள்ளார். இது சீனாவை டிராகனாகவும் இந்தியாவை யானையாகவும் குறிக்கப்படும் வேளையில், இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பெரும் நன்மைகள் கிடைக்கும் என்று இதன் மூலம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகள் மத்தியிலான தொடர்புகளை அதிகரிக்கவும், ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இரு நாடுகள் மத்தியில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கவும் முயற்சி செய்ய வேண்டும் என்று ஜி ஜின்பிப் தனது செய்தியின் வாயிலாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
வர்த்தக கூட்டணி
சமீபத்தில் சீன இந்தியாவுக்கு தொழில்நுட்ப பரிமாற்றம் கொண்ட முதலீடுகளுக்கும், கூட்டணிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த நிலையில் குடியரசு தின வாழ்த்தில் சீனா மாறுப்பட்ட நிலைப்பாட்டை வைத்திருக்கும் வேளையில் இந்தியாவுக்கு புதிய கதவுகள் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் சீனா தற்போது கனடா உடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில் சீனா புதிய பாதையை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்தியா-சீனா
இந்தியாவும் சீனாவும் அணு ஆயுதம் கொண்ட நாடுகள், இரு நாடுகளுக்கும் இடையே 3,800 கிலோமீட்டர் நீளமான எல்லை உள்ளது, இந்த எள்லை நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது. 2020ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். இதனால் இன்றளவும் எல்லை பகுதிகள் அதிக ராணுவ கட்டமைப்புகள் உடன் உள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு முதல் உறவில் படிப்படியான மேம்பாடு ஏற்பட்டுள்ளது. உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை, நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்கியது, வர்த்தகம் மற்றும் முதலீடு அதிகரித்தது ஆகியவை இதற்கு சான்றாக உள்ளன. இவை இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மீண்டும் அமைதியான பாதையில் கொண்டு செல்லும் முயற்சிகளாக பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியத்துவம்
ஜி ஜின்பிங் தனது செய்தியில் உலக அமைதி மற்றும் செழிப்புக்கு நிலையான இந்தியா-சீன உறவு அவசியம் என்று கூறியுள்ளார். இரு நாடுகளும் ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக உள்ளன. அவை ஒன்றிணைந்து செயல்பட்டால் பிராந்திய மற்றும் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். கடந்த காலத்தில் பதற்றங்கள் இருந்தபோதிலும், தற்போது ஏற்பட்டுள்ள நல்ல மாற்றம் இரு நாட்டு மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கிறது.


Click it and Unblock the Notifications