கல்வான் தாக்குதலுக்குப் பின்பு இந்தியா சீன நட்புறவில் மிகப்பெரிய விரிசல் விழுந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்திய அரசும் சீன நிறுவனங்களுக்கும், சீன நிறுவனங்களின் சேவைகளுக்கும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில் இந்திய மக்கள் மத்தியில் சீன நிறுவனங்கள் மீதும், தயாரிப்புகள் மீதும் அதிகளவிலான வெறுப்பு நிலவி வருகிறது.
இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் என்றால் டிஜிட்டல் மற்றும் பொழுதுபோக்கு சேவையில் இருந்த நிறுவனங்களும், இந்தியச் சந்தையைக் ஆளும் சீன மொபைல் நிறுவனங்களும் தான்.
இந்திய மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காகவே சியோமி தற்போது முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வீவோ விலகல்
இந்திய ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் சுமார் 81 சதவீத சந்தையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீன மொபைல் நிறுவனங்கள், சீன வர்த்தகத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் விவோ ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சர்-ல் இருந்து விலகியது.
சியோமி
இந்தியாவின் முன்னணி மொபைல் விற்பனை நிறுவனமாகத் திகழும் சியோமி நிறுவனத்தின் Mi Browser Pro மற்றும் Mi Community செயலிகளைப் பாதுகாப்புக் காரணமாக இந்திய அரசு மக்கள் பயன்படுத்தத் தடை விதித்தது.
இதுமட்டும் அல்லாமல் ஜூன் காலாண்டில் இந்தியாவில் சீன ஸ்மார்ட்போன்களின் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலவசம்
இப்படித் தொடர்ந்த பாதிப்புகளைச் சந்தித்து வரும் சியோமி, இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு Teach for India என்கிற ஒரு NGO உடன் இணைந்து கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள், கொரோனா காலத்தில் கல்வியை ஆன்லைன் மூலம் தொடர வேண்டும் என்று சுமார் 2500 குழந்தைகளுக்குச் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை இலவசமாக அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது சியோமி.
கூட்டணி
இந்த ஸ்மார்ட்போன் விநியோகத்தை ரீலைட் விற்பனையாளர்கள் வாயிலாக Teach for India உடன் இணைந்து கொரோனா-வால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைக் கண்டறிந்து ஸ்மார்ட்போன்களை இலவசமாகக் கொடுக்க உள்ளதாகச் சியோமி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மனு குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.
டிவி மற்றும் ஸ்மார்ட்போன்
இந்தியாவில் விற்பனையாகும் ஸ்மார்ட் டிவி மற்றும் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் பெரிய அளவிலான வர்த்தகத்தைச் சியோமி கட்டியாண்டு வருகிறது. சமீபத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாகக் குறைந்த விலையில் லேப்டாப்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
இதுவும் மக்களைக் கவர்ந்து கணிசமான வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
சாம்சங்
சியோமி, விவோ, ஓப்போ ஆகிய முன்னணி சீன நிறுவனங்கள் கடந்த சில வாரங்களில் பெரிய அளவிலான வர்த்தகத்தை இழந்துள்ளது. இந்த வர்த்தக இடைவெளியைத் தென் கொரியாவின் சாம்சங் நிறுவனமும், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications