உலகளவில் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமாக இருக்கும் சீனாவின் சியோமி பிராண்ட் கடந்த 5 வருடமாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும், விற்பனையிலும் பெரும் புரட்சி செய்து அனைத்து தரப்பு மக்களையும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அளவுக்கு நிலைமையை மாற்றிய பெருமை சியோமிக்கு உண்டு.
இந்த நிலையில் உலகளவில் டிரெண்டாகியிருக்கும் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடிவு செய்த சியோமி, ஆரம்பத்திலிருந்தே நவீன, ஆடம்பர, வேகமாகச் செல்லக்கூடிய காரை மலிவான விலைக்கு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.

இதன் வாயிலாக அனைத்து கண்டிஷன்களையும் டிக் செய்து சியோமி நிறுவனம் அறிமுகம் செய்தது புதிய எலக்ட்ரிக் கார் மாடலான எஸ்யூ7. இந்த கார் பிரபல ஸ்போர்ட்ஸ் காரான போர்ஷ்-க்கு நிகராக இருக்கும் காரணத்தாலும் விலை குறைவாக இருக்கும் காரணத்தாலும் சீன மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
சியோமி எஸ்யூ7 கார் சனிக்கிழமை வரை, 70,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் (lock-in orders) செய்யப்பட்டுள்ளதாக சியோமி நிறுவனர் லெய் ஜூன் செவ்வாய்க்கிழமை இந்நிறுவன முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
2024 இல் 1 லட்சம் கார்கள் விற்பனை இலக்கு: சியோமி நிறுவனத்தின் தலைவர் லூ வீபிங் (Lu Weibing) தனது வீபோ (Weibo) கணக்கில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் லெய் ஜூன் பகிர்ந்த முக்கிய தகவல்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். அதன்படி, 2024 ஆம் ஆண்டில் 1 லட்சம் எஸ்யூ7 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய சியோமி இலக்கு வைத்துள்ளது.
டெலிவரி தொடங்கியது: கடந்த வாரம், திட்டமிட்டதை விட முன்னதாகவே எஸ்யூ7 கார்களின் ஸ்டாண்டர்டு மாடல்களின் டெலிவரியைத் தொடங்கியிருப்பதாக லூ வீபிங் அறிவித்திருந்தார்.
சீன சந்தை: சியோமி தனது முதல் எலக்ட்ரிக் காரான எஸ்யூ7 கார், போட்டி நிறைந்த சீன எலக்ட்ரிக் கார் சந்தையில் கவனத்தை ஈர்க்கும் வகையில், அதன் அடிப்படை மாடல் காரின் விலை, டெஸ்லா மாடல் 3 விட 4,000 டாலர் குறைவாகவும், 30,000 டாலருக்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
லாபம் தேவையே இல்லை..!!: சியோமி நிறுவனம் நிதி வளம் மிக்க நிறுவனம் என்பதால், எஸ்யூ7 காரில் லாபம் ஈட்ட எதிர்பார்க்கவில்லை, சந்தையைக் கைப்பற்றுவது தான் டார்கெட்.
ஆரம்ப கட்ட வாடிக்கையாளர்களுக்காகக் கூடுதல் அம்சங்களுடன் வழங்கப்பட்ட "ஃபவுண்டர்ஸ் எடிஷன்" என்ற 5,000 கார்களை சியோமி ஏற்கனவே உற்பத்தி செய்திருந்தது. இதில் ஒரு சில கார்களின் டெலிவரி ஏப்ரல் 3 ஆம் தேதி தொடங்கியது. ஆனால், முழுமையான ஸ்டாண்டர்டு மாடல்களின் டெலிவரி கடந்த வியாழக்கிழமை பெய்ஜிங் மற்றும் ஷென்ஜென் நகரங்களில் தொடங்கியுள்ளது.
சியோமி எஸ்யூ7 மீதான ஆரம்பகட்ட வரவேற்பு மிகவும் சிறப்பாக உள்ளது. நிறுவனத்தின் விற்பனை இலக்கை எட்ட முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். போட்டி நிறைந்த சீன எலக்ட்ரிக் கார் சந்தையில் சியோமி தனது இடத்தை எவ்வாறு பிடிக்கும் என்பதையும் எதிர்பார்க்கலாம்.
இதன் வாயிலாக எலான் மஸ்க் டெஸ்லா கார்களின் விற்பனை சரிந்ததைத் தொடர்ந்து ,டெஸ்லா நிறுவனம், அமெரிக்காவில் மாடல் Y, மாடல் X, மற்றும் மாடல் S கார்களின் விலையை குறைத்தது. இதனை தொடர்ந்து சீனாவிலும் கார்களின் விலையை குறைத்திருக்கிறது.
மாடல் 3 காரின் விலையை 14,000 யுவான் குறைத்து, 2,31,900 யுவான் என அறிவித்துள்ளது. மாடல் Y காரின் விலை 2,49,900 யுவான், மாடல் S காரின் விலை 6,84,900 யுவான் மற்றும் மாடல் S பிளெய்டு 8,14,900 யுவான் என கணிசமான அளவு விலை குறைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications