அமெரிக்கா ஸ்ட்ராட்டஜிக் ரிசர்வில்(கிரிப்டோ மூலோபாய இருப்பு) XRP, சோலானா (SOL), மற்றும் கார்டானோ (ADA) ஆகிய கிரிப்டோகரன்சிகளின் பெயர்கள் சேர்க்கப்படவுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, இவை சந்தை வர்த்தகத்தில் மிக அதிக அளவில் மதிப்பு உயர்வுகளை கண்டுள்ளன.
டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்தநிலையில் தற்போது அதிபரின் பணியாளர் குழுவிற்கு டிஜிட்டல் சொத்துகளுக்கான ஸ்டிராட்டஜிக் ரிசர்வை உருவாக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புதிய அமெரிக்க கிரிப்டோ ஸ்டிராட்டஜிக் ரிசர்வின் திட்டத்தை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார், இதில் மூன்று முக்கியமான கிரிப்டோகரன்சிகளான XRP (ரிப்பிள்), SOL (சோலானா), மற்றும் ADA (கார்டானோ) ஆகியவை சேர்க்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார். இந்த அறிவிப்பு, சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியது, இதனால் இந்த டிஜிட்டல் சொத்துகளின் மதிப்பு 10% முதல் 35% வரை உயர்ந்தது.

இதன்மூலம் அமெரிக்காவை "உலகின் கிரிப்டோ நகர்" ஆக மாற்றுவதே அதிபர் டிரம்பின் தொலைநோக்கு பார்வை என்றும் கூறப்படுகிறது. அதாவது, முந்தைய பைடன் நிர்வாகத்தின் மோசடி தடுப்பு மற்றும் பண பரிமாற்ற மோசடி உள்ளிட்டவைகளுக்கு எதிராக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், இந்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், கிரிப்டோ விலைகளில் சரிவு இருந்தபோதிலும், டிரம்பின் கொள்கை மாற்றம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் தூண்டக்கூடும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அதிகாரப்பூர்வமாக, இது அமெரிக்கா மத்திய வங்கியின்(பெடரல் ரிசர்வ்) வட்டி விகித குறைப்புகள் அல்லது மேலும் கிரிப்டோ ஆதரவு நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்டால் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கக்கூடும். இருப்பினும், கிரிப்டோ ஸ்டிராட்டஜிக் ரிசர்வின் சரியான கட்டமைப்பு இன்னும் தெளிவாக இல்லை என்று கூறப்படுகிறது.
இதற்கு காங்கிரஸின் ஒப்புதல் தேவையா அல்லது அமெரிக்க கருவூலத்தின் பரிவர்த்தனை உறுதிப்படுத்தல் நிதி(US Treasury's Exchange Stabilization Fund) மூலம் செயல்படுத்த முடியுமா என்பது குறித்து சட்ட வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர். மேலும், சட்ட அமலாக்க நடவடிக்கைகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் சொத்துக்கள் இந்த ரிசர்வில் இணைக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
இந்தநிலையில், வரும் வெள்ளிக்கிழமை அன்று, வெள்ளை மாளிகையில் முதல் முறையாக கிரிப்டோ உச்சி மாநாட்டை டிரம்ப் நடத்த உள்ளார், இது அவரது நிர்வாகத்தின் கிரிப்டோ ஆதரவு நிலையை மேலும் வலுப்படுத்த உதவும். அமெரிக்க அரசு டிஜிட்டல் சொத்துகளுடன் தனது ஈடுபாட்டை ஆழப்படுத்தும் நிலையில், எதிர்வரும் ஒழுங்குமுறை வளர்ச்சிகள் மற்றும் அவற்றின் தொழில்நுட்பத்தின்மேல் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் கவனத்துடன் கையாளப்படவேண்டும்.


Click it and Unblock the Notifications