இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடையும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இந்த வருடம் துவக்கத்தில் இருந்தே டாப் 3 முதல் 5 இடங்களில் தொடர்ந்து இருந்து வருகிறது. இது மட்டும் அல்லாமல் 2030 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் அளவீட்டிற்கு உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு 2023 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்து மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் வெளிநாட்டு நிறுவனங்களை அதிகளவில் ஈர்த்தது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்க முதலீடும், தொழிற்துறை கட்டமைப்புகள், வேலைவாய்ப்புகள் உருவாக்குவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்தது.

டிசம்பர் மாத மழையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டது. இப்பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகளும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டிவிஎஸ், பாக்ஸ்கான் முதல் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருக்கும் பெரும்பாலான தொழிற்சாலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
டிசம்பர் மழை வெள்ளம் மக்களுக்கு எந்த அளவுக்குப் பாதித்ததோ அதற்கு இணையாகத் தொழிற்துறை, உற்பத்தி, ஏற்றுமதி, வர்த்தகம் என அனைத்தையும் பாதித்துள்ளது. ஆனால் 2023 ஆம் ஆண்டை மொத்தமாகப் பார்க்கும் போது தமிழ்நாட்டு முதலீட்டு சந்தைக்கும், தொழிற்துறைக்கும் மிகவும் சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் டெக்ஸ்டைல் துறையைத் தாண்டி முக்கிய ஏற்றுமதி மற்றும் உற்பத்தி துறையாக மாறியிருக்கும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி துறையில் உண்மையிலேயே பண மழை பொழிந்துள்ளது. இந்த முதலீடுகள் 2024 ஆம் ஆண்டில் பெரும் லாபத்தையும், வர்த்தகத்தையும் உருவாக்கும்.
எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி துறையில் 2023 ஆம் ஆண்டில் சிஸ்கோ முதல் வின்பாஸ்ட் வரையில் முதலீடு செய்துள்ளது, ஆனால் வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் முதலீடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வியட்நாம் நாட்டின் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட் தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைப்பதற்காகத் திட்டமிட்டு வருகிறது.
2023 ஆம் ஆண்டில் சிஸ்கோ, ஏசஸ் -பிளெக்ஸ், பாக்ஸ்கான் - மொபைல் உதிரிப்பாகங்கள், கார்னிங் கொரில்லா கிளாஸ், டாடா எலக்ட்ரானிக்ஸ் - ஐபோன் கேசிங் மற்றும் அசம்பிளி, விவிடிஎந் டெக், சால் கம்ப், Hi-P International, மிட்சுபிஷி எலக்ட்ரிக், ஓம்ரான், ஓலா எலக்ட்ரிக் விரிவாக்கம், ரெனால்ட் நிசான் எலக்ட்ரிக் வாகனம், ஹூண்டாய் எலக்ட்ரிக் வாகனம், ராயல் என்பீல்ட் எலக்ட்ரிக் வாகனம், பெகாட்ரன் விரிவாக்கம், பாக்ஸ்கான் விரிவாக்கம் ஆகிய முதலீடுகள் வந்துள்ளது.
மேலும் கடந்த 2 மாதங்களாகப் புதிய முதலீடுகள் குறித்த அறிவிப்பு குறைவாக இருக்க முக்கியக் காரணம் ஜனவரி 2024ல் நடக்க உள்ள சர்வதேச முதலீட்டு மாநாடு காரணமாக அறிவிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் ஜப்பான் நிறுவனங்கள் அதிகப்படியான முதலீட்டு அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications