அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்தே வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அந்நாட்டு குடியேற்ற கொள்கை விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே விசா பெற்று அமெரிக்காவில் தங்கி இருப்பவர்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றனர், புதியதாக அத்தனை எளிதில் யாருக்கும் விசா வழங்கப்படுவதில்லை. இந்த சூழலில் அமெரிக்காவில் தங்கி பயிலக்கூடிய வெளிநாட்டு மாணவர்கள் விசா விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்றால் உடனடியாக அவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவர் என அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்தியாவில் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் மாணவர் விசாவில் சென்று கல்வி பயிலக்கூடிய மாணவர்கள் விசா நடைமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என கூறி இருக்கிறது. வகுப்புகளை தவறவிடுவது, திடீரென படிப்பை பாதியில் நிறுத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்களின் விசாக்கள் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் எதிர்காலத்தில் அவர்களுக்கு அமெரிக்க விசா வழங்குவதற்கான வாய்ப்புகளும் பறிபோகும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் கல்வி பயிலும் பல்கலை நிர்வாகத்திற்கு தெரியாமல் திடீரென படிப்பை பாதியில் நிறுத்துவது என்பன உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விசா வழங்கும்போது உங்களுக்கு என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டதோ அவற்றை நீங்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும் இல்லை என்றால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு பதவி ஏற்றதிலிருந்து வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. பல இடங்களில் ஏற்கனவே விசா பெற்று அமெரிக்காவிற்கு வந்து பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
குறிப்பிட்ட சில பல்கலைகழகங்களில் பயிலும் மாணவர்களின் விசாக்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக சில மாணவர்கள் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த சூழலில் தான் அமெரிக்க தூதரகம் மாணவர்கள் விசா விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்றால் எதிர்காலத்திலும் அமெரிக்கா விசா கிடைக்காது என்ற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
பிரச்சினைகளைத் தவிர்க்க எப்போதும் உங்களுக்கான விசா விதிமுறைகளை கடைபிடித்து, மாணவர் நிலையை பாதுகாத்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளது. டிரம்ப் அரசு ஏற்கனவே சட்டவிரோதமாக குடியேறியதாக 500க்கும் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது. எனவே மாணவர்கள் விதிகளை பின்பற்றவில்லை என்றால் எதிர்காலமே கேள்விக்குறியாகும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications