சென்னை: மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர உள்ளதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
மொபைல் சேவை நிறுவனங்கள், மொபைல் ரீசார்ஜ் திட்டங்களை மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு உயர்த்த உள்ளதாக ஆண்டிக் ஸ்டாக் புரோக்கிங் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, பொதுத் தேர்தலுக்குப் பிறகு தொலைத்தொடர்பு துறையில், ரீசார்ஜ் கட்டணங்கள் 15 முதல் 17 சதவீதம் வரை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி என்று கூறப்பட்ட நிலையில், ரீசார்ஜ் கட்டணம் அதன் பிறகு உயர உள்ளது என ஆண்டிக் ஸ்டாக் புரோக்கிங் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, தொலைத்தொடர்பு துறையில் கட்டண உயர்வு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது, தேர்தலுக்குப் பிறகு ரீச்சார்ஜ் கட்டண உயர்வு உறுதி என்று நம்பப்படுகிறது. இதில் பார்தி ஏர்டெல் நிறுவனம் தேர்தலுக்குப் பிறகு கட்டணத்தை 15 முதல் 17 சதவீதம் வரை உயர்த்துவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அறிக்கை கூறுகிறது. கட்டணம் கடைசியாக டிசம்பர் 2021 இல் சுமார் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதாவது சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணங்கள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
17% அதிகரிப்பு என்பது, ரூ. 300 ரீசார்ஜ் கட்டணமானது, இந்த விலை உயர்வுக்கு பின் ரூ. 351 ஆக மாறக்கூடும். இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 2026-27 நிதியாண்டில் ஒரு பயனருக்கு (ARPU) சராசரியாக ரூ. 208 லாபம் ஈட்டியுள்ளது. இந்த ARPU வரும் நாட்களில், 286 ரூபாயை எட்டும் வாய்ப்பு உள்ளது என்று கணித்துள்ளது.
ஏர்டெல் ஏற்கனவே அதன் தற்போதைய திட்டங்களில் சிலவற்றின் கட்டணத்தை உயர்த்தத் தொடங்கியுள்ளது. சில மலிவான திட்டங்களை நீக்கவும் ஆரம்பித்துள்ளது. நிறுவனத்தின் கிராமப்புற விரிவாக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. ப்ரீபெய்ட் திட்டம் 1ஜிபி டேட்டா, 100 மெசேஜ்கள், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், விங்க் மியூசிக் மற்றும் Zee5 பிரீமியம் போன்றவற்றை 18 நாட்களுக்கு வழங்குகிறது. சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான் மற்றும் உ.பி. கிழக்கு உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் உள்ள பயனர்களுக்கு இது கிடைக்கிறது. இருப்பினும், குறைந்த லாப வரம்புகளைக் கண்டதையடுத்து ஏர்டெல் இந்த திட்டத்தை ரத்து செய்தது. அதற்கு பதிலாக, ஏர்டெல் இந்த திட்டத்தை மீண்டும் விலை ஏற்றத்துடன் அறிமுகப்படுத்தியது. ரூ.99 திட்டம் இப்போது ரூ.155க்கு கிடைக்கிறது.
பார்தி ஏர்டெல்லின் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஆண்டுக்கு இரண்டு சதவீதம் அதிகரிக்கும் என்றும், ஒட்டுமொத்த தொழில்துறை ஆண்டுக்கு ஒரு சதவீதம் வளரும் என்றும் அறிக்கை கணித்துள்ளது. வோடபோன் ஐடியாவின் சந்தைப் பங்கு செப்டம்பர் 2018 இல் 37.2 சதவீதத்திலிருந்து பாதியாக, 19.3 சதவீதமாக, டிசம்பர் 2023க்குள் குறைந்துள்ளது. இதற்கிடையில், பார்தியின் சந்தைப் பங்கு 29.4 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரித்துள்ளது, மேலும் ஜியோவின் சந்தைப் பங்கு உயர்ந்தது. 21.6 சதவீதத்தில் இருந்து 39.7 சதவீதமாக உள்ளது.


Click it and Unblock the Notifications