இன்றைய சூழலில் எங்கு பார்த்தாலும் AI தொழில்நுட்பம் அதிகம் பயன்படுகிறது. நாம் தினசரி பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் முதல் ஐடி நிறுவனங்கள் வரை AI-யின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப படித்து முடித்த மாணவர்களும் தங்களுடைய திறன்களை அதிகரித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அதற்காக அரசு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்திய அரசு "இந்தியா ஏஐ" என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் "யுவா AI" என்ற இலவச ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் கோர்ஸை அறிமுகம் செய்துள்ளது. இதை அரசின் பியூச்சர் ஸ்கில்ஸ் ப்ரைம் (FutureSkills Prime) மற்றும் ஐகாட் கர்மயோகி (iGOT Karmayogi) ஆகிய தளங்கள் மூலமாக இலவசமாகப் பெறலாம்.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் வளர வளர ஒரு சில ஐடி நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது. கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஏஐ முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி வருவதால், மிடில் கிளாஸ் மாணவர்கள், வேலைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் என அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம் சுமார் 1 கோடி பேர் அடிப்படை ஏஐ அறிவைப் பெற முடியும். முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இந்த பாடத்திட்டத்தை வெறும் 4.5 மணி நேரம் செலவு செய்து முழுவதுமாக படித்து முடித்து விடலாம். இதற்கு ஏதாவது அடிப்படை பயிற்சி தேவையா என்றால்.. அப்படி எதுவும் தேவையில்லை. ஏஐ பற்றிய எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் இருப்பவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
"யுவா AI" கோர்ஸில் எந்தெந்த விஷயங்கள் வழங்கப்பட்டுள்ளன?: ஏஐ சார்ந்த அடிப்படை விஷயங்களை இதன் மூலம் எளிதில் கற்றுக் கொள்ளலாம். உதாரணமாக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது?, எந்தெந்த இடங்களில் எல்லாம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது?, ஒரு வேலை நீங்கள் பணியில் சேர்ந்தால் இந்த தொழில்நுட்பத்தை எப்படி கையாள்வது?, அன்றாட வாழ்க்கையில் AI தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள்?, எதிர்கால வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? போன்றவற்றை உதாரணத்தோடு கற்றுக் கொள்ள முடியும். இதனால் AI பற்றிய எக்ஸ்பீரியன்ஸ் இல்லாதவர்களும் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
யுவா AI கோர்ஸில் சேர்வது எப்படி?: பியூச்சர் ஸ்கில்ஸ் ப்ரைம் என்ற அரசு இணையதளத்திற்கு சென்று "YUVA AI for ALL" என்ற பேஜுக்கு செல்ல வேண்டும். பின்னர் அங்கு "Enroll" என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அல்லது "ஸ்டார்ட் லேர்னிங்" என்ற பட்டனையும் கிளிக் செய்யலாம். வழக்கம் போல ஒரு இணையதளத்தில் உள்நுழைந்ததும் "சைன் இன்" செய்ய வேண்டும். உங்கள் ப்ரோபைலையும் பூர்த்தி செய்து விட்டு படிக்கத் தொடங்கலாம். பின்னர் ஒவ்வொரு பாடமாக படித்து முடித்த பிறகு அதற்கான டெஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கும். முடித்தவுடன் உங்களுக்கு அரசு சார்பில் ஆன்லைன் சர்டிபிகேட் வழங்கப்படும்.
யார் யார் யுவா ஏஐ மூலம் இலவசமாக ஏஐ பயிற்சி பெறலாம்?: பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், ஐடி நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், இல்லத்தரசிகள் தொழில்முனைவோர், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் பற்றி கற்றுக் கொள்ள ஆர்வம் உடையவர்கள் இதில் சேரலாம்.
இந்திய அரசின் ஆன்லைன் சர்டிபிகேட்டை உங்கள் ரெஸ்யூமில் சேர்த்துக் கொண்டு வேலைவாய்ப்பை பெற விண்ணப்பிக்கலாம், இன்றைய சூழலில் இலவசமாக ஏஐ பயிற்சி வழங்குவது என்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உங்களுடைய திறனையும் மேம்படுத்திக் கொண்டால் நிறுவனங்கள்.. உங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் என்பதில் ஐயமில்லை.


Click it and Unblock the Notifications
