இந்தியாவில் குயிக் காமர்ஸ் செயலிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகர்ப்புறங்களில் வசிக்கக்கூடிய நபர்கள் தங்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை கூட இதுபோன்ற செயலிகள் வாயிலாக ஆர்டர் செய்துதான் வாங்கிக் கொள்கிறார்கள். அந்த வகையில் மக்களிடையே தற்போது இத்தகைய குயிக் காமர்ஸ் செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளன. இதனை பயன்படுத்தி கொண்டு இந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பல்வேறு புதிய கட்டணங்களை வசூல் செய்வது தெரிய வந்திருக்கிறது.
நாட்டில் குயிக் காமர்ஸ் சந்தை தற்போது 8.2 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டதாக இருக்கிறது 2028 ஆம் நிதியாண்டில் இது 31 பில்லியன் டாலர்களாக உயரும் என கணிக்கப்படுகிறது. குயிக் காமர்ஸ் சேவையில் செப்டோ, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் ஆகிய நிறுவனங்கள் தான் 85 சதவீத சந்தையை கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் இந்த நிறுவனங்கள் வழக்கமான டெலிவரி கட்டணம் மட்டுமல்லாமல் கூடுதலாக 6 ரூபாயில் இருந்து 30 ரூபாய் வரை பல்வேறு கட்டணங்களை விதிக்கப்படுவது எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி மூலம் தெரிய வருகிறது. ஹேண்டிலிங் கட்டணம், மழைக்கால கட்டணம், உயர்தர டெலிவரி கட்டணம், பல்க் ஆர்டர்களுக்கு கட்டணம் என பல பெயர்களில் இந்த கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன.

இலவச டெலிவரி வேண்டும் என்றால் அதற்கு குறைந்தபட்ச ஆர்டர் வேல்யூ என்பதும் உயர்த்தப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் இலவச டெலிவரி வழங்கிய இந்த குயிக் காமர்ஸ் தளங்கள், தற்போது குறைந்தபட்சம் 100 முதல் 150 ரூபாய் வரையிலான ஆர்டர்களுக்கு தான் இலவச டெலிவரியை வழங்குகின்றன. இலவச டெலிவரி வேண்டும் என்பதற்காகவே குறைந்தபட்சம் 150 ரூபாய் வரை ஆர்டர் செய்ய வேண்டி உள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனங்களில் செய்யப்படும் ஆர்டர்களின் மதிப்பு அதிகரிக்கிறது. அதேவேளையில் இந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபமும் உயர்கிறது என ஜெஎம் பைனான்சியல் நிறுவனம் கூறுகிறது.
குயிக் காமர்ஸ் பிரிவில் போட்டி அதிகரித்து இருக்கிறது அதற்கேற்ற வகையில் இந்த நிறுவனங்கள் தங்களுடைய கிடங்குகளை விரிவாக்கம் செய்து வருகின்றன. குயிக் காமர்ஸ் வேகமாக வளர்ந்து வந்தாலும் இந்நிறுவனங்கள் இதுவரை தாங்கள் நினைத்த லாபத்தை அடையவில்லை. இதனை கருத்தில் கொண்டுதான் இந்த நிறுவனங்கள் ஹேண்டிலிங் கட்டணம் பிளாட்பார்ம் கட்டணம், பீக் அவர்களில் கூடுதல் கட்டணம் உள்ளிட்டவற்றை விதிக்க தொடங்கிவிட்டன.
பிக் பாஸ்கெட், பிளிப்கார்ட் மினிட்ஸ் ஆகியவற்றுடன் போட்டியை எதிர்கொள்ள இந்நிறுவனங்கள் டெலிவரி கட்டணங்களை நேரடியாக உயர்த்தாமல் இப்படி மறைமுகமாக பல்வேறு கட்டணங்களை வசூல் செய்வதாக இத்துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மட்டும் பிளிங்கிட் 178 கோடி ரூபாயை நஷ்டமாக அடைந்திருக்கிறது. அதேபோல இன்ஸ்டாமார்ட் மட்டும் 840 கோடி ரூபாயை நஷ்டமாக அடைந்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications