இந்திய குவிக் காமர்ஸ் துறையில் வேகமாக வளர்ந்து வரும் செப்டோ, சந்தையில் அதன் பெயருக்கு ஏற்ப காலாண்டு முடிவுகளும் மாஸ் காட்டுகிறது. 2024ஆம் நிதியாண்டில் அதாவது மார்ச் 2024 வரையிலான காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் சுமார் 120% குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து சக போட்டி நிறுவனங்களை மிரள வைத்துள்ளது.
2023ஆம் நிதியாண்டில் ரூ.2,026 கோடியாக இருந்த வருவாய் 2024ஆம் நிதியாண்டில் ரூ.4,455 கோடியாக உயர்ந்துள்ளது என்பதை செப்டோ நிறுவனம் கார்ப்ரேட் விவகார துறை அமைச்சகத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அபார வளர்ச்சிக்கு 10 நிமிட டெலிவரி சேவையின் தரம் மற்றும் அதில் நிறைந்துள்ள லாபகரமான வர்த்தக மாடல் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இந்த அதிரடி வருவாய் வளர்ச்சி மூலம் செப்டோவின் நிகர நஷ்டம் 2% என்ற அளவில் சற்று குறைந்து, 2023ஆம் நிதியாண்டில் ரூ.1,271.84 கோடியாக இருந்த நஷ்டத்தின் அளவு, 2024ஆம் நிதியாண்டில் ரூ.1,248.64 கோடியாக குறைந்துள்ளது.
செப்டோ தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய மார்க்கெட்டிங், பொருட்கள் மற்றும் பிற செலவுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு கணிசமான முதலீடுகளைச் செய்தது. இந்த முதலீடுகள் மொத்த செலவுகளில் 72% அதிகரிப்புக்கு வழிவகுத்தது.
செப்டோவின் செலவு 2023ஆம் நிதியாண்டில் ரூ.3,350 கோடியாக இருந்தது, 2024ஆம் நிதியாண்டில் ரூ.5,747 கோடியாக உயர்ந்துள்ளது. செலவினங்களில் இந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தபோதிலும், வருவாய் அதிகரிப்பு, நிறுவனத்தின் நஷ்டத்தில் சிறிய அளவிலான குறைப்பு ஆகியவற்றின் மூலம் மொத்த நஷ்டத்தின் அளவு, 2023ஆம் நிதியாண்டில் ரூ.1,272 கோடியாக இருந்தது, 2024ஆம் நிதியாண்டில் சுமார் 2% குறைந்து ரூ.1,249 கோடியாக உள்ளது.
2024 ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் மிகப்பெரிய செலவாக பொருட்கள் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்டது, இது ரூ.3,449.83 கோடியாக இருந்தது.
பிற முக்கிய செலவினங்களைப் பொறுத்தவரை, செப்டோ ஊழியர் செலவுகளுக்கு ரூ.426.30 கோடியை ஒதுக்கியது, இது முந்தைய நிதியாண்டில் செலவிடப்பட்ட ரூ.263.45 கோடியிலிருந்து 62% அதிகமாகும்.
இதேபோல் கிடங்குகளின் நிர்வாகம் மற்றும் அனைத்து செலவுகளும் அதிகரிப்பைக் கண்டன, மொத்தம் ரூ.492.65 கோடி, முந்தைய ஆண்டின் ரூ.344.79 கோடியிலிருந்து 43% உயர்வு. கூடுதலாக, நிறுவனம் 2024ஆம் நிதியாண்டில் விளம்பரம் மற்றும் ப்ரோமோஷன் நடவடிக்கைகளுக்கு ரூ.303.55 கோடியை முதலீடு செய்தது, இது முந்தைய நிதியாண்டில் செலவிடப்பட்ட ரூ.215.82 கோடியிலிருந்து 41% அதிகமாகும்.
2021 ஆம் ஆண்டில் ஆதித் பாலிச்சா மற்றும் கைவல்யா வோஹ்ரா ஆகியோரால் நிறுவப்பட்ட செப்டோ டேட்டாலாப்ஸ், மளிகைப் பொருட்கள், பேக் செய்யப்பட்ட உணவுகள், சாப்பிடத் தயாரான உணவுகள், அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை 10 நிமிட டெலிவரி சேவைகளை வழங்குவதில் தனி முத்திரையை பதித்துள்ளது.


Click it and Unblock the Notifications