பெங்களூரு: இந்தியாவில் குயிக் காமர்ஸ் பிரிவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஸெப்டோ நிறுவனத்தில் பல்வேறு பெருந்தலைகளும் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குயிக் காமர்ஸ் எனப்படும் மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வீட்டுக்கே டெலிவரி செய்யக்கூடிய ஸெப்டோ உள்ளிட்ட தளங்கள் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன.

இந்த நிலையில் ஸெப்டோவின் தாய் நிறுவனமான கிரானா கார்ட் சிங்கப்பூரில் இருந்து தங்கள் நிறுவன செயல்பாடுகளை இந்தியாவுக்கு மாற்றுவதற்காக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளது.
எனவே அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் இந்தியாவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பங்கு வைத்திருக்கக்கூடிய நிறுவனமாக ஸெப்டோ மாறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக கிரானா கார்ட் இந்தியாவை சேர்ந்த பெருமுதலாளிகளிடம் நிறுவன பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.
இதனை மணிப்பால் மருத்துவ குழுமத்தின் தலைவரான ரஞ்சன்பாய், மேன் கைண்ட் பார்மா நிறுவன சகோதரர்கள் ரமேஷ் ஜூனேஜா மற்றும் ராஜீவ் ஜூனேஜா மற்றும் சிப்லா நிறுவனத்தை சேர்ந்த தலைவர்கள் முதலீடு செய்வதற்கு முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் தான் ஸெப்டோ நிறுவனம் மிகப்பெரிய அளவில் நிதி திரட்டலில் ஈடுபட்டது. இந்தியாவை சேர்ந்த பல்வேறு உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களும் இதில் முன் வந்து முதலீடு செய்துள்ளனர். 150 மில்லியன் டாலர்கள் வரை முதலீடு ஈர்க்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்தியாவில் 500 கிடங்குகளை வைத்துக்கொண்டு செயல்பட்டு வரும் ஸெப்டோ அடுத்த ஆண்டில் இதனை 700 ஆக அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் 160 மில்லியன் டாலர்களையும் 2023 ஆம் ஆண்டில் 231 மில்லியன் டாலர்களையும் நிதியாக திரட்டியது. நடப்பு ஆண்டில் சுமார் 1000 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸெப்டோ நிறுவனம் இன்னும் பெரிய அளவில் தங்களை விரிவு படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது .வரும் டிசம்பருக்குள் இந்த நிறுவனம் 3.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான விற்பனை என்ற இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
மளிகை பொருட்கள் மட்டுமில்லாமல், பொம்மைகள் ,மின்னணு சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ,செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றையும் தங்களுடைய செயலி வாயிலாக விற்பனை செய்வதற்கு ஸெப்டோ தயாராகி வருகிறது.
மளிகை சாமான்கள் மட்டும் இல்லாமல் அனைத்து பொருட்களையுமே 10 நிமிடங்களிலேயே டெலிவரி பெற்றுக் கொள்ள முடியும் என ஸெப்டோ கூறுகிறது. இதற்காக தங்களுடைய தலைமை அலுவலகத்தை மும்பையில் இருந்து முழுவதுமாக பெங்களூருக்கு ஸெப்டோ நிறுவனம் மாற்றியுள்ளது.
தற்போதைய சூழலில் ஸெப்டோவில் முதலீடு செய்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள். எனவே இந்திய முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்கினை வைத்திருந்தால் அது முற்றிலும் இந்திய நிறுவனமாக மாறும்.
இந்தியாவில் குயிக் காமர்ஸ் துறை 2027 ஆம் ஆண்டில் 22 பில்லியன் டாலர்கள் கொண்டு துறையாக வளரும் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் குயிக் காமர்ஸ் பிரிவில் வேகமாக வளர்ச்சி அடைந்து நிறுவனங்களாக பிளிங்கிட் மற்றும் ஸெப்டோ ஆகியவை இருக்கின்றன.


Click it and Unblock the Notifications