சென்னை: தமிழ்நாட்டில் தங்களுடைய தொழிலை மேம்படுத்துவதற்காக ஸெப்டோ (Zepto) நிறுவனம் 20க்கும் அதிகமான டார்க் ஸ்டோர்கள் எனப்படும் கிடங்குகளை அமைத்திருக்கிறது.
இந்தியாவில் தற்போது ஸெப்டோ, பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை நாம் ஆர்டர் செய்த 10 நிமிடங்களிலேயே நமக்கு டெலிவரி செய்து வருகின்றன. குயிக் காமர்ஸ் என இந்த பிரிவு அழைக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் இவற்றை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் குயிக்காமர்ஸ் பிரிவில் இயங்கும் நிறுவனங்களிடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. ஸெப்டோவை பொறுத்தவரை சென்னை மட்டுமில்லாமல் கோயம்பத்தூர் ,திருச்சி ,மதுரை, வேலூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களிலும் சேவை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தன்னுடைய சேவையை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிட்டுள்ள ஸெப்டோ நிறுவனம் புதிதாக 20 இடங்களில் தங்களுடைய டார்க் ஸ்டோர்களை நிறுவி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த டார்க் ஸ்டோர்கள் எனப்படும் கிடங்குகளில் தான் மளிகை சாமான்களை வாங்கி ஸ்டாக் வைத்து குயிக் காமர்ஸ் நிறுவனங்கள் டெலிவரி செய்கின்றன. அதிக எண்ணிக்கையிலான டார்க் ஸ்டோர்களை நிறுவுவதன் மூலம் தங்கள் செயலி வாயிலாக மக்கள் குறிப்பிட்ட பொருட்களை ஆர்டர் செய்யும் போது 10 நிமிடங்களுக்குள் ஆர்டர் அவர்களை சென்று சேர வேண்டும் என்பது உறுதி செய்யப்படுவதாக ஸெப்டோ நிறுவனம் கூறுகிறது.
இதற்காக அருகருகிலேயே டார்க் ஸ்டோர்களை நிறுவுவதாகவும் ஸெப்டோ நிறுவனம் தெரிவிக்கிறது. எனவே டெலிவரி பார்ட்னர்கள் 10 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக வேகமாக வாகனங்களை இயக்க வேண்டும் என்ற தேவை இருக்காதாம். மேலும் ஸெப்டோ நிறுவனம் தமிழ்நாட்டை சேர்ந்த நூறு விவசாயிகளுடன் ஒரு புதிய கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் இளநீர் மற்றும் காய்கறி உள்ளிட்டவற்றை நேரடியாக விவசாயிகளிடமிருந்தே வாங்கி தங்களுடைய செயலி வாயிலாக விற்பனை செய்ய உள்ளது.
ஸெப்டோ நிறுவனம் இதற்காக பாலக்கோடு மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருக்கும் விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு தங்கள் நிறுவனத்தின் முக்கியமான சந்தை எனக் கூறும் ஸெப்டோ நிறுவனத்தின் அதிகாரிகள் , சேவை விரிவாக்கம் செய்வதன் மூலம் உள்ளூரை சேர்ந்த வணிகர்களும் மிகப்பெரிய அளவில் பயன் அடைகிறார்கள் என கூறுகின்றனர்.
வேகமாக டெலிவரி செய்ய வேண்டும் நாங்கள் டெலிவரி செய்யக்கூடிய பொருள் தரமானதாக இருக்க வேண்டும் என்பது ஆகிய இரண்டும் தான் எங்களது நோக்கம் என்கின்றனர். அண்மையில் தான் சென்னை அருகே மாடம்பாக்கத்தில் பெண்கள் மட்டுமே பணிபுரியக்கூடிய டார்க் ஸ்டோரை ஸெப்டோ நிறுவியது. இந்த ஸ்டோர் முழுவதுமாக 22 பெண்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக பெண்கள் மட்டுமே செயல்படும் ஒரு டார்க் ஸ்டோராக இது திகழ்ந்து வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications