மளிகை பொருட்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரையில் ஹோம்
டெலிவரி செய்யும் குவிக் காமர்ஸ் வணிகத்தில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜெப்டோ, தற்போது தனது சேவையை அடுத்தக்கட்டத்திற்கு விரிவுபடுத்தி கார் விற்பனையிலும் களமிறங்கியுள்ளது. ஜெப்டோ மற்றும் ஸ்கோடா இந்தியா இணைந்து இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஜெப்டோ செயலியின் மூலம் ஸ்கோடா கார்களை வாங்க முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
ஜெப்டோ குவிக் காமர்ஸ் துறையில் தொடர்ந்து பல பிரிவுகளில் இறங்கி அசத்தி வருகிறது, இளம் தலைமுறையினரை டார்கெட் ஆக வைத்துக்கொண்டு இயங்கும் இத்தளம் சிலமாதங்களுக்கு முன்பு ஜெப்டோ கஃபே என்ற சேவையை அறிமுகம் செய்தது. இதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஐபிஓ-வுக்கு திட்டமிட்டு வரும் ஜெப்டோ தற்போது கார் விற்பனையில் இறங்கியுள்ளது.

இந்த புதிய கூட்டாணி தொடர்பாக ஜெப்டோ வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில், ஜெப்டோ டெலிவரி ஊழியர் ஒருவர் ஸ்கோடா கார் ஷோரூமிற்குச் சென்று வாடிக்கையாளர் ஆர்டர் செய்த ஸ்கோடா க்யாக் காரை எடுத்துச் செல்வது காட்டப்பட்டுள்ளது.
கார் வாங்குதல் மற்றும் டெலிவரி செய்யும் முறையில் இந்த புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக ஆடம்பர கார்களை வீட்டிற்கு சென்று டெலிவரி செய்யும் வழக்கம் துவங்கியது, இதை ஓலா நிறுவனம் தனது ஆன்லைன் விற்பனை தளத்தின் விற்பனைக்காக கையில் எடுத்தது.

தற்போது ஜெப்டோ 3ஆம் தரப்பு நிறுவனத்திற்காக டெலிவரி செய்ய ஆட்டோமொபைல் துறையில் இறங்கியுள்ளது. இந்த டீசர் வீடியோ சுவாரஸ்யமாக இருந்தாலும் பல முக்கிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
குறிப்பாக வாகனங்களை டெலிவரி செய்ய எடுக்கும் நேரம் குறித்து வீடியோவில் எந்த தகவலும் இல்லை. ஜெப்டோவின் வழக்கமான 10 நிமிட டெலிவரி நேரத்தில் கார்கள் வழங்கப்படுமா அல்லது அதற்கு அதிக நேரம் எடுக்குமா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், பணம் செலுத்துதல், வாகன ஆவணங்கள் மற்றும் காப்பீடு உள்ளிட்ட செயல்முறைகள் எவ்வாறு கையாளப்படும், போன்ற முக்கியமான விபரங்களை வெளியிடப்படவில்லை.

இந்தியாவில் குவிக் காமர்ஸ் சேவைகளின் வளர்ச்சி மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கை பெற்றுள்ளது என்பதை ஜெப்டோ-ஸ்கோடா கூட்டணி காட்டுகிறது. ஆனால் இந்த சேவை வெற்றி பெறுமா என்ற கேள்வியும் உள்ளது.



Click it and Unblock the Notifications