இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் குவிக்-காமர்ஸ் தளமான Zepto, தனது 10 நிமிட உணவு டெலிவரி சேவையான Cafe க்கான தனி செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் உணவு டெலிவரி வணிகத்தை விரிவுபடுத்தவும், வேகமாகவும் உணவுகளை தனது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய உள்ளது.
Zepto இதுநாள் வரையில் காய்கறிகள், மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களை தான் தனது தளத்தில் விற்பனை செய்து வந்தது. சமீப காலமாக Zepto Cafe என்ற பெயரில் நாட்டின் முக்கிய நகரங்களில் இருக்கும் காஃபி ஷாப்-களை இணைத்து கேக், காஃபி, டீ, ஜூஸ், ஸ்னாக்ஸ் ஆகியவற்றை டெலிவரி செய்து வருகிறது.

இந்நிறுவனம் தனது Cafe சேவையை வேகமாக விரிவுபடுத்தி, மாதத்திற்கு 100 க்கும் மேற்பட்ட புதிய கஃபேக்களைச் சேர்த்து தினமும் 30,000 க்கும் அதிகமான ஆர்டர்களை செயல்படுத்தி வருகிறது. Zepto-வின் இந்த விரிவாக்கம் உணவு பிரிவிலும் 10 நிமிட டெலிவரியை அறிமுகம் செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
10 நிமிட உணவு டெலிவரி இடத்தில் Zepto-வின் வருகை ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற மற்ற நிறுவனங்கள் மத்தியில் போட்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Swiggy-யின் 10 நிமிட டெலிவரி சேவையான Bolt, இந்தியா முழுவதும் 400 க்கும் மேற்பட்ட நகரங்களில் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.
மற்றொரு ஸ்டார்ட்அப் நிறுவனமான Swish, உணவுப் பொருட்களை 10 நிமிட டெலிவரி சந்தையில் நுழைந்துள்ளது. ஆனால் குவிக் காமர்ஸ், உணவு டெலிவரி ஆகிய இரண்டிலும் முன்னோடியாக இருக்கும் சோமேட்டோ தனது 10 நிமிட டெலிவரி சேவையை கூர்கிராமில் சோதனை செய்தாலும், தற்காலிமாக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
Motilal Oswal பிரைவேட் வெல்த் பிரிவின் தலைமையில் Zepto நிறுவனம் சமீபத்தில் 350 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியது. இந்த முதலீட்டு சுற்றில் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள், பணக்கார குடும்பங்கள், முன்னணி நிதி நிறுவனங்கள் இணைந்து முதலீடு செய்தது.
இதற்கு மத்தியில் Zepto-வில் மோசமான வேலைச் சூழல் நிலவுவதாக, இந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் சமுகவலைத்தளமான ரெட்டிட் தளத்தில் பதிவு செய்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்தது.
இந்த பதிவு ரெட்டிட் தளத்தில் Scary_split3157 என கணக்கில் இருந்து பதிவிடப்பட்டு உள்ளது, இதில் "நான் ஒரு வருடமாக Zepto-வில் பணிபுரிந்து வருகிறேன். இந்த நிறுவனம் மிகவும் விஷத்தன்மையான வேலைச் சூழல். இதற்கு அதிகமான புகழ் கிடைத்திருந்தாலும், உண்மையான நிலைமை எப்படி இருக்கிறது என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications