பெங்களூரு: பொதுவாக நாம் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுக்கும்போது ஒரு கணிசமான தொகையை டெபாசிட்டாக உரிமையாளருக்கு செலுத்த வேண்டியது இருக்கும்.
இது நாம் தேர்ந்தெடுக்கும் வீட்டை பொருத்து, அதாவது ஒரு பெட்ரூம், இரண்டு பெட்ரூம் வீடு மற்றும் அந்த வீடு அமைந்திருக்கக் கூடிய இடம் அல்லது அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றின் தன்மையை பொறுத்து டெபாசிட் தொகையானது மாறுபடும்.

தற்போது பெங்களூருவில் ஜீரோ டெபாசிட் ரெண்டல் என்ற நடைமுறை பிரபலமாகி வருவது தெரிய வந்துள்ளது. நோ ப்ரோக்கர் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பெங்களூருவில் அண்மைக்காலமாகவே டெபாசிட் இல்லாத வீட்டு வாடகை முறையை பெரும்பாலானவர்கள் விரும்புவதாக தெரிய வந்துள்ளது.
ஜீரோ டெபாசிட் முறையில் நாம் பெரிய தொகையை வழங்க வேண்டியதில்லை. இதற்கு மாற்றாக வாடகைக்கு குடிவருபவர்கள் முதலீட்டு பத்திரங்களை (rental bonds) வாங்கி வழங்க வேண்டும். இது டெபாசிட் தொகைகளில் 6 -10% வரை தான் இருக்கும். இத்தகைய பத்திரங்கள் நாளடைவில் வீட்டு உரிமையாளர்களுக்கு லாபத்தையும், பாதுகாப்பையும் தருகின்றன.
பெங்களூருவில் தி சிட்டி ஆஃப் கார்டன் நான்கு படுக்கையறை கொண்ட வீட்டிற்கு டெபாசிட் மட்டுமே 30 லட்சமாக இருக்கிறது. அதே போல வாடகை வீடுகளுக்கான டெபாசிட் என்பது ஒவ்வொரு ஆண்டுக்கும் 20 சதவீதம் வரை உயர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் புதிதாக வாடகைக்கு வீடு தேடுபவர்களுக்கு அதற்கான டெபாசிட் தொகையை தயார் செய்வதே பெரிய சவாலாக இருந்து வருகிறது.
குறிப்பாக வேலை வாய்ப்புகளுக்காக தனி நபர்களாக பெங்களூரு நகருக்கு குடிபெயர்வோர் இவ்வளவு பெரிய தொகையை டெபாசிட் ஆக வழங்குவது என்பது மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் தான் ஜீரோ டெபாசிட் என்ற புதிய நடைமுறை என்பது பெங்களூரு நகரில் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி வீட்டு உரிமையாளர்களுக்கு பாண்டுகளை அதாவது பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. இந்த பத்திரங்கள் அவர்களுக்கான ஒரு உத்தரவாதமாக பார்க்கப்படுகிறது.
குடியிருப்பவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்தாலோ அல்லது கரண்ட் பில் உள்ளிட்டவற்றை செலுத்தாமல் இருந்தாலும் இதனை அந்த உரிமையாளர்கள் இந்த பத்திரங்களை பயன்படுத்தி ஈடு செய்து கொள்ள முடியும்.
நோபுரோக்கர்.காம் நிறுவனத்தின் துணை நிறுவனரான அமித் குமார் அகர்வால் தற்போது பெங்களூரு வாடகை சந்தையில் ஜீரோ டெபாசிட் ரெண்டல் ப்ராபர்டிகளுக்கான தேவை அதிகரித்து இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். இது வாடகைக்கு குடிவருபவர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது என கூறுகிறார்.
பெங்களூருவில் நோபுரோக்கர்.காம் நடத்திய ஆய்வில் வாடகைக்கு குடியிருப்பவர்களில் 35% பேர் ஜீரோ டெபாசிட் முறைக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளனராம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications