இந்தியாவில் சாதனை சரித்திரப் பெருமைகளுக்குப் பஞ்சமே கிடையாது. ஐஐடி, ஐஐஎம்களில் படித்தவர்களில் பலர் இன்றைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களை கட்டியாண்டு வருகின்றனர். இது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை பாதியில் கைவிட்ட ஏராளமானவர்களும் சாதித்து காட்டி வருகின்றனர். இவர்களில் ஒருவர்தான் நிகில் காமத்.
மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வை எழுதாமல் படிப்பில் கோட்ட விட்டவர். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் இளம் வயது பில்லியனராக உருவெடுத்து எல்லார் மூக்கிலும் விரலை வைக்கும் அளவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

10 ஆம் வகுப்பு படிக்கும்போது மிகக் குறைந்த மதிப்பெண்களை அவர் எடுத்து வந்ததால் இறுதித் தேர்வுக்கு அவரை அனுப்ப பள்ளி மறுத்துவிட்டது. இதனால் நிகில் காமத் மனம் தளரவில்லை. தனக்கென்று ஒரு சுய தொழிலைத் தொடங்கவேண்டும் என்று அந்தச் சிறு வயதிலேயே முடிவெடுத்தார்.
அவருக்கு 14 வயது இருக்கும்போது தொடக்கத்தில் செல்போன்களை விற்கத் தொடங்கினார். பின்னர் அவர் ஒரு கால்சென்டரில் மாதம் ரூ.8000 சம்பளத்துக்கு வேலை பார்த்தார். இந்த நிலையில் 2022-23 ஆம் நிதியாண்டில் ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் சம்பாதிக்கிறார்.
2010இல் வணிகர்களுக்கு மாற்றாக ஒரு பிளாட்பாரத்தைத் தொடங்கி நிதி சேவைகள் நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தார். இதைத் தொடர்ந்து அவரது சகோதரரான நிதின் காமத்துடன் சேர்ந்து ஜிரோதா(Zerodha) நிறுவனத்தை நிறுவினார். மூன்றே வருடங்களில் அந்த நிறுவனம் ரூ.2000 கோடிக்கு மேல் லாபத்தைப் பார்த்தது.
ஒரு கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களைக் கொண்ட ஜிரோதா நிறுவனம் இந்தியாவில் செயல்படும் வர்த்தக மற்றும் முதலீடுகளில் ஈடுபடும் அனைத்து ரீடெய்லர்களின் எண்ணிக்கையில் 15 சதவீத அளவுக்கு வர்த்தகம் செய்கிறது. நாட்டின் மிகப் பெரிய ஆன்லைன் பங்கு வர்த்தக நிறுவனமாகத் திகழ்கிறது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பு பிரஷ்ஷர்களுக்கான நிறுவனமாக ஜிரோதா உள்ளது. இது முழுக்க முழுக்க இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செயல்படுகிறது. இந்திய சந்தையில் மட்டுமே வர்த்தகம் செய்கிறது.
2023 ஆம் ஆண்டில் ஜிரோதா நிறுவனத்தின் மதிப்பு 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு உயர்ந்தது. இந்திய மதிப்பில் ரூ.30,000 கோடி.
நிகில் காமத்தின் ஆண்டு வருமானம் ரூ.72 கோடியாகும். இது கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ரூ.19.72 லட்சம் வருமானம் ஆகும். அவரது சகோதரர் நிதின் காமத்துக்கும் அதே அளவு ஊதியம். பிற சலுகைகளுடன் சேர்ந்து இருவரது வருவாய் ரூ.195.4 கோடியாகும். நிகிலின் மாதச் சம்பளம் ரூ.6 கோடி. இப்போது நிகில் காமத்தின் நிகர மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் ரூ.9,150 கோடி.


Click it and Unblock the Notifications