இப்போது உலகம் முழுவதும் பெரிய மாற்றங்கள் நடக்கின்றன. போர் போன்ற கலவரங்கள், விலை வாசி உள்ளிட்டவற்றால் நாடுகள் எல்லாம் தங்களுக்கே பாதுகாப்பாக இருப்பதற்காக மற்ற நாடுகளுடன் நட்பு வியாபாரத்தை குறைத்து, தங்களது உற்பத்தியை அதிகரிக்க முயற்சி செய்கின்றன. இந்த நிலைமையில், இந்தியா போன்ற நாடுகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகின்றன. ஜூரோதா நிறுவன சிஇஓ நிகில் காமத் இந்த புதிய சூழ்நிலையை இந்தியா எப்படி பயன்படுத்தலாம் என்று கூறியிருக்கிறார்.
நிகில் காமத் கூறியதாவது, நீண்ட நாள் பயன்பாட்டுக்கு ஏற்ற பொருட்களை (அதாவது 3 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தக் கூடியவை) உருவாக்கும் இந்திய நிறுவனங்களுக்கு உலகம் முழுவதும் பெரிய சந்தை இருக்கிறது. உலகம் பாதுகாப்பு நோக்கில் மாறி வருகிறதால், இந்தியாவில் தயாரிக்கப்படும் தரமான, அழகான பொருட்கள் வெளிநாடுகளில் நம்பிக்கையுடன் வாங்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நிகில் காமத் கூறியுள்ள நான்கு முக்கியமான துறைகள்: முதலாவது, ஃபர்னிச்சர், இதில் டேபிள், நாற்காலி, கட்டில்கள் போன்ற பொருட்கள் அடங்கும். இரண்டாவது, நகைகள் மற்றும் கைக்கடிகாரங்கள், இதில் நகைகள் மற்றும் நேரம் காட்டும் வாட்ச் போன்றவை சேர்க்கப்படுகின்றன. மூன்றாவது, கார்பட்ஸ், விளக்குகள், வீட்டு சாதனங்கள், இதில் மெத்தை, பாய், லைட் மற்றும் வீட்டு உள்ளே பயன்படுத்தும் சிறிய சாதனங்கள் அடங்கும். நான்காவது, பேக்குகள் மற்றும் லக்கேஜ்கள், இதில் பயணப்பைகள்(Travel bags), ஸூட்ட்கேஸ் போன்ற பொருட்கள் உள்ளன.
மக்களின் எதிர்வினைகள்: இந்தியாவிடம் மிகச்சிறந்த கைவினை திறனும், மரப்பொருட்களும் இருக்கின்றன. IKEA மாதிரியான ஒரு இந்திய நிறுவனத்தை உருவாக்கலாம். மலிவு, அழகு, தரம் எல்லாம் சேர்ந்தால் நிச்சயம் வெற்றி நமதுதான் என்று எக்ஸ் பயனர் கூறியுள்ளார். அதேபோல், மற்றொரு பயனர் இந்திய நகைகளில் கலாச்சாரமும் பாரம்பரியமும் உள்ளது. உலகம் முழுவதும் இது மிகவும் பிரபலமாகலாம் என்று கூறியுள்ளார்.
உலக நிலைமையின் தாக்கம்: அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் நடந்து கொண்டு இருக்கிறது. அமெரிக்கா தற்போது பல நாடுகளுக்கு எதிராக வரிகள் (Taxes) போட்டு வருகிறது. இது பல முதலீட்டாளர்களை பதற்றமடையச் செய்கிறது.
IMF எச்சரிக்கை: சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, அதிக வரிகள் மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகள், நாடுகளின் பொருளாதார செலவுகளை பாதிக்கும். வர்த்தகத்தில் நடக்கும் கடுமையான மாற்றங்களுக்கு நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறியது.
உலகம் பாதுகாப்பு நோக்கில் மாறும்போது, இந்தியா தயாரிக்கும் தரமான, பாரம்பரிய பொருட்களுக்கு அதிக மதிப்பு ஏற்படுகிறது. நிகில் காமத் சொல்வது போல, ஃபர்னிச்சர், நகைகள், பயணப்பைகள் போன்ற துறைகள் பெரிய வாய்ப்புகளை உருவாக்கும். இவை அனைத்தும் "Made In India" என்ற அடையாளத்துடன் உலக சந்தையை கைப்பற்றும் நாள்கள் அதிகம் தூரம் இல்லை.


Click it and Unblock the Notifications