சென்னை: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் பங்கு வர்த்தக தளமான Zerodha இணை நிறுவனரும், நாட்டின் இளம் பணக்காரர்களில் ஒருவருமான நிகில் காமத், மதுபான நிறுவனத்தில் பெரும் முதலீடு செய்துள்ள தகவல் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நிகில் காமத் நடத்தும் WTF என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சி சமீபத்தில் பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது. 37 வயதான நிகில் காமக் சமீபத்தில் இந்தியாவின் மதுபான வியாபாரம் குறித்தும் இத்துறையில் இருக்கும் முக்கிய நபர்களையும் வைத்து பாட்காஸ்ட் நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் நிகில் காமத் தான் லலித் கைதானின் ரேடிக்கோ கைதான் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகக் கூறினார். மேஜிக் மொமண்ட்ஸ் வோட்கா, 8PM விஸ்கி, ஓல்ட் அட்மிரல் பிராண்டி மற்றும் ராம்பூர் சிங்கிள் மால்ட் உள்ளிட்ட பிரபல மதுபான வகைகளை தயாரிக்கும் நிறுவனம் இது.
நிகில் காமத் இளம் வயதில் இருந்தே பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்து வரும் வேளையில், Zerodha வெற்றியின் மூலம் கிடைத்த பணத்தைப் பல பிரபலமான நிறுவனங்களில் முதலீடு செய்வது வழக்கம். அந்த வகையில் நிகில் காமத் காஃபி கடையில் இருந்து மதுபானம் வரையில் பல துறையில் பல நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
இந்த நிலையில் நிதின் காமத் WTF பாட்காஸ்ட் நிறுவனத்தில் பேசும் போது தான் ரேடிக்கோ கைதான் நிறுவனத்தில் 1.6 முதல் 1.7 சதவீத பங்குகளை வைத்திருப்பதாகவும், "இதுபற்றி இதுவரை பொதுவெளியில் பேசியதில்லை" என்றும் தெரிவித்தார்.
ஓப்பன் மார்கெட்டில் சுமார் ரூ.400 கோடி மதிப்பிலான பங்குகளை நாங்கள் வாங்கியுள்ளோம். இது எனக்குச் சிறந்த முதலீடாக இருப்பதால், அபிஷேக் கைதானிடம் (ரேடிக்கோ கைதான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்) இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவரை குறைவாக வறுத்தெடுப்பதைத் தவறாக நினைக்க வேண்டாம் என்று விளையாட்டாகப் பேசினார்.
நிகில் காமத்-ன் இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ரேடிக்கோ கைதான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அபிஷேக் கைதான், சைடுகார் மினாட்சி சிங் (SideCar Minakshi Singh - இணை நிறுவனர்), ஜின் எக்ஸ்ப்ளோரர்ஸ் கிளப் ஷூச்சிர் சுரி (Gin Explorer's Club Shuchir Suri - இணை நிறுவனர்) மற்றும் கோவா ப்ரூவிங் கோ நிறுவனர் சுராஜ் ஷெனாய் (Suraj Shenai) ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரேடிக்கோ கைதான் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.22,949 கோடி ஆக இருக்கிறது, தொடக்கத்தில் இந்நிறுவனம் பாட்டிலிங் பிரிவில் இயங்கவே உருவாக்கப்பட்டாலும் 1997 ஆம் ஆண்டு முதல் பிராண்டட் மதுபான வகைகளை தயாரித்து வருகிறது.
தற்போது ரேடிக்கோ கைதான் நாட்டின் பிற பிரபலமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், ஸ்டில்டிஸ்டில்லிங் ஸ்பிரிட்ஸ் இந்தியா மற்றும் திரிட் ஐ டிஸ்டில்லரி ஹோல்டிங்ஸ் போன்றவற்றுடன் போட்டிப்போட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications