சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் Zoho நிறுவனத்தில் இதுவரையில் நடந்திடாத வகையில் மிகப்பெரிய அளவிலான தலைமை மாற்றம் நடைபெற்றுள்ளது. ஜனவரி 27 ஆம் தேதி டிவிட்டரில் தற்போதைய சிஇஓவான ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவில் தான் சிஇஓ பதவியில் இருந்து விலகிவிட்டு Chief Scientist என்ற புதிய பதவியை ஏற்க உள்ளதாக அறிவித்தார்.
இப்பதவியில் ஸ்ரீதர் வேம்பு சோஹோ நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) முயற்சிகளுக்குத் தலைமை தாங்குவதாகத் தெரிவித்தார். இதன் மூலம் Zoho நிறுவனம் இனி வரும் காலகட்டத்தில் R&D துறையில் அதிகப்படியான கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது உறுதியாகிறது. இதேவேளையில் ஸ்ரீதர் வேம்பு-வின் சிஇஓ பதவிக்கு வருபவர் தான் ஷைலேஷ் குமார் டேவி. யார் இவர்..?

சென்னையில் இருந்துகொண்டு 50க்கும் அதிகமான நாடுகளில் சாப்ட்வேர் சேவை அளித்து வருவது மட்டும் அல்லாமல் சேல்ஸ்போர்ஸ், ஜென்டெஸ்க் போன்ற பன்னாட்டு நிறுவனத்துடன் போட்டிப்போடும் SAAS சாம்ராஜ்ஜியமாகவும் ZOHO விளங்குகிறது. ZOHO நிறுவனம் பிற டெக் ஸ்டார்ட்அப் போல் அல்லாமல் பூட்ஸ்டார்ப் முறையில் உருவாக்கப்பட்ட ஒரு சாம்ராஜ்ஜியம், இந்த மாபெரும் வளர்ச்சியில் ஸ்ரீதர் வேம்பு உடன் துணையாக இருந்தவர் தான் ஷைலேஷ் குமார் டேவி.
ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவில் ZOHO-வின் புதிய குரூப் சிஇஓ-வாக ஷைலேஷ் குமார் டேவி பொறுப்பேற்றுக் கொள்வார் என தெரிவித்தார். ஷைலேஷ் குமார் டேவி Zoho நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.
ஷைலேஷ் குமார் டேவி - யார் இவர்?
ஷைலேஷ் குமார் டேவி-யின் லிங்க்டின் ப்ரொபைல் தகவல் படி, அவர் IIT கல்லூரியில் உலோகவியலில் இளநிலை பட்டமும் (B.Tech), ஐஐடி மெட்ராஸ் கல்லூரியில் தொழிற்துறை மேலாண்மையில் முதுநிலைப் பட்டமும் (M.Tech) பெற்றுள்ளார்.
ஷைலேஷ் குமார் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், Zoho நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப மேலாண்மை பிரிவான ManageEngine-இல் இன்ஜினியரிங் பிரிவின் துணைத் தலைவராக பணியாற்றினார்.
Zoho நிறுவனத்தின் மொத்த இன்ஜினியரிங் பிரிவை நிர்வாகம் செய்த அனுபவம் ஷைலேஷ் குமாருக்கு உள்ளது, இதோடு சோஹோ-வின் இணை நிறுவனராக இந்நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையில் முக்கிய பங்காற்றியவர். இதனாலேயே நிறுவனத்தை எதிர்காலத்திற்கு வழிநடத்தும் உரிமையும், தகுதியையும் ஷைலேஷ் குமார் பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications