சென்னை: அண்மையில் 26 வயது இளம் பெண் ஒருவர் பணிச்சுமை காரணமாக உயிரிழந்தது தேசிய அளவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்துயுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் இருக்கும் பணி கலாச்சாரத்தில் மாற்றம் தேவை என பலரும் கூறி வருகின்றனர். இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான ஸோஹோவின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்புவும் இதே கருத்தை முன் வைத்துள்ளார்.
பிடிஐ தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, ஊழியர்களின் நலன் சார்ந்த வகையிலான வேலை முறைகளை கொண்டு வர வேண்டியது நிறுவனங்களின் கடமை என தெரிவித்துள்ளார். பெரிய நகரங்களில் மிகுந்த அழுத்தம் கொண்ட வேலைச் சூழல்கள் ஊழியர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என தெரிவித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, நிறுவனங்கள் தங்களுடைய செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

பணிச் சுமை காரணமாக ஊழியர்கள் இறப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள அவர், தற்போது பிரஷர் குக்கருக்குள் இருப்பதைப் போன்ற ஒரு சூழலில் தான் அனைவரும் வேலை செய்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனங்கள் இந்த பிரச்சனையை கண்டு உரிய தீர்வு காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர், பெருநகரங்களில் வேலை, குடும்பத்தினரை விட்டு தனியாக இருப்பது, நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியது, மன அழுத்தம் தரக்கூடிய வேலை சூழல்கள் ஆகியவை ஊழியர்களை ஒரு பெரிய பிரஷர் குக்கருக்குள் கொண்டு அடைப்பது போன்று இருக்கிறது, இதனால் தான் உயிரிழப்புகள் வரை நேர்கிறது என தெரிவித்துள்ளார். குறுகிய கால லாபத்திற்காக ஊழியர்களை அவர்களின் வரம்பினை மீறி வேலை செய்ய வைப்பது மிகப்பெரிய தவறு என எச்சரித்துள்ளார்.
”நான் 27 முதல் 28 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன் அடுத்து 28 ஆண்டுகளுக்கு வேலை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் அவ்வாறு வேலை செய்வதற்கு நானும் அல்லது என்னுடைய நிறுவன ஊழியர்களும் சோர்வடைந்து விடக்கூடாது. எனவே வேலையில் ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை இருக்க வேண்டும், அதன் முக்கியத்துவம் ஊழியர்களின் நலனாக இருக்க வேண்டும்.
இதுதான் நீண்ட கால அடிப்படையில் ஒரு நிறுவனம் வெற்றியடைவதற்கு உதவியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார். குறிப்பாக பெரிய நகரங்களில் இருக்கும் நிறுவனங்களை டவுன்களுக்கும் கொண்டு வர வேண்டும் , அதாவது ஊழியர்கள் முயன்றவரை அவர்கள் குடும்பத்தினருடன் இருந்தே வேலைக்கு சென்று வரக்கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இளைஞர்கள் படித்து முடித்த உடனே வேலை தேடி பெரிய நகரங்களுக்கு வந்து விடுகின்றனர். அவ்வாறு வரும்போது அவர்கள் சந்திக்கும் முதல் சவால் தனிமை. இதனை அடுத்து அவர்கள் இந்த போக்குவரத்து நெரிசல்களை கடந்து வேலைக்கு சென்று விட்டு திரும்ப வருவது மற்றொரு பிரச்சனை. இதற்கு மத்தியில் அவர்களின் வரம்பை மீறி வேலை செய்ய வைப்பது அவர்களுக்கும் நிறுவனத்திற்கும் எந்த நன்மையும் பயக்காது என தெரிவித்துள்ளார்.
Written by: Devika


Click it and Unblock the Notifications