ஸோஹோ தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு உலக பொருளாதாரம் குறித்த தனது கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார். அவ்வப்போது சமூக பிரச்சனைகள் குறித்து குரல் கொடுப்பவர் ஸ்ரீதர் வேம்பு. இவர் தற்போது உலக பொருளாதாரத்தின் போக்கு குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீதர் வேம்பு, அரசாங்கங்களின் கடன்கள் அதிகரித்து வருவதையும் பங்குச்சந்தைகளின் மதிப்பீடு உயர்ந்து வருவதற்கும் இடையினான தொடர்பினை அவர் சுட்டிக்காட்டி தன்னுடைய கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது நிதி சந்தைகள் மூலம் செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட இந்த செல்வம், பல தசாப்தங்களாக அதிகப்படியான கடன் வாங்குதலால் உந்தப்பட்டு உலக பொருளாதாரத்தை நீடிக்க முடியாத பாதையில் கொண்டு சென்று விட்டது என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இதன் முடிவில் பணவீக்க அல்லது பணவாட்ட மந்தநிலையை உலகம் எதிர்கொள்ளும் என அவர் எச்சரித்துள்ளார். புகழ்பெற்ற முதலீட்டாளரான பில் கிராஸினை மேற்கோள் காட்டியுள்ள ஸ்ரீதர் வேம்பு இந்த சூழல் நெருப்பு அல்லது பனி போன்றது என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீதர் வேம்புவின் விருப்பமான முதலீடாக தங்கம் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வதற்கு பாதுகாப்பான முதலீடாக தங்கம் இருக்கிறது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
வால் ஸ்ட்ரீட் சில்வர் என்ற எக்ஸ் பக்கத்தில் அமெரிக்கா பொருளாதாரம் மற்றும் அந்நாட்டுக்கு இருக்கும் கடன்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவினை மேற்கோள்காட்டி ஸ்ரீதர் வேம்பு உலக பொருளாதார நிலையை குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் அமெரிக்கா தற்போது ஆண்டுதோறும் 1.2 ட்ரில்லியன் டாலர்களை கடன்களுக்கான வட்டியாக மட்டுமே செலுத்துகிறது அமெரிக்கா தற்போது 36 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை மொத்த கடனாக வைத்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் செலுத்தும் வரிகளில் 23% தொகை கடன்களுக்கான வட்டியை செலுத்தவே பயன்படுத்தப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு கடனும் கடனுக்கான வட்டியும் மேலும் அதிகரித்தால் அமெரிக்க அரசுக்கு அழுத்தம் இன்னும் அதிகமாகும் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு நாடுகளும் தற்போது அதிகப்படியான கடனில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியமான ஐ எம் எஃப் கவலை தெரிவித்துள்ளது.
மொத்தமாக உலக நாடுகளின் கடன் அளவு 100 ட்ரில்லியன் டாலர்களை எட்ட கூடும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. 2024ஆம் இறுதியில் உலக ஜிடிபியில் கடன்களின் அளவு 93 சதவீதத்தை எட்டு கூடும் என தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டில் 100 சதவீதம் என்ற அளவை எட்டு விடும் என்றும் கூறியுள்ளது.
பசுமை எரிசக்திகளுக்கு மாற வேண்டும் , வயதான மக்கள் தொகை அதிகரிப்பது மற்றும் மக்களுக்கு தேவையான சமூகப் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்குவது ,தேச பாதுகாப்பு ஆகியவற்றிற்காக பல்வேறு நாடுகளின் அரசுகளும் முன்பை விட அதிக அளவிலான பணத்தை செலவு செய்கின்றன என தெரிவித்துள்ள ஐஎம்எஃப் இதற்காகவே இந்த நாடுகள் அதிக அளவில் கடன்களை வாங்குகின்றன என்கிறது.


Click it and Unblock the Notifications