இந்தியாவின் முன்னணி SAAS நிறுவனமான ZOHO-வின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனை எதிரொலியாக டெக் துறையில் மிகப்பெரிய நிலையற்ற தன்மை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்திய டெக் துறை ஏற்கனவே மந்தமாக இருக்கும் வேளையில் ஸ்ரீதர் வேம்பு பேச்சு ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் மத்தியில் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீதர் வேம்பு ஒரு தொலைக்காட்சி போட்டியில் பேசிய போது, உலகளாவிய ஐடி சேவை துறையின் வர்த்தகம் ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் போதும், மத்திய கிழக்கு நாடுகளில் நடந்திருக்கும் பிரச்சனை ஐடி துறையின் வர்த்தக வாய்ப்புகளை கூடுதலாக மோசமாக்கியுள்ளது என தெரிவித்தார்.

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனைக்கு முன்னதாகவே சர்வதேச பொருளாதாரம் மந்த நிலைக்குள் செல்ல துவங்கியுள்ளது. இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியிருக்கும் பிரச்சனையால் ஐடி துறையின் எதிர்காலம் எப்படியிருக்கும் என யாராலும் உறுதியாக சொல்ல முடியாது எனவும் பேசியுள்ளார்.
மேலும் ZOHO-வின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய நிறுவனத்தில் செப்டம்பர் மாதத்தில் அனைத்து ப்ராடெக்ட்கள், அனைத்து சந்தைகளிலும் வளர்ச்சி அளவுகள் மந்தமடைந்துள்ளது. குறிப்பாக புதிய வாடிக்கையாளர்களை பெறுவதிலும், ஏற்கனவே ப்ராடெக்ட் விற்பனை செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் ரினிவல் செய்வதும் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
இதோடு ZOHO-வில் புதிய வாடிக்கையாளர்கள் சேர்ப்பு செப்டம்பர் மாதத்தில் 10 முதல் 15 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. ஆனால் இந்தியாவில் ZOHO-வின் வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் பிற முன்னணி ஐடி சேவை நிறுவனங்களை போலவே ZOHO-வின் இந்திய வர்த்தகம் தனது மொத்த வர்த்தகத்தில் வெறும் 10 சதவீதம் தான்.
இந்திய ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் 2023 ஆம் நிதியாண்டின் துவக்கத்தில் இருந்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில், செப்டம்பர் மற்றும் டிசம்பர் காலாண்டு குறித்து பல கணிப்புகள் அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்து வருகிறது.
மேலும் கடந்த சில வருடங்களாக இந்திய ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய மத்திய கிழக்கு நாடுகளுக்கு படையெடுத்து, புதிதாக அலுவலகங்களை திறப்பது மட்டும் அல்லாமல் அதிகப்படியான ஊழியர்கள் பணியமர்த்தி, முதலீடுகளை செய்தது.


Click it and Unblock the Notifications