ஸ்ரீதர் வேம்புவால் தொடங்கப்பட்ட Zoho நிறுவனம் இந்தியாவிலேயே தொடங்கப்பட்டு வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு ஐடி சேவை நிறுவனமாக இருக்கிறது. கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு ஜோஹோ நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டில் கூட ஏராளமான மத்திய அமைச்சர்கள் ஜிமெயிலுக்கு மாற்றாக ஜோஹோ மெயிலுக்கு மாறி அதனை பயன்படுத்த தொடங்கினர். இந்தியாவின் நம்பிக்கை மிகுந்த நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உருவெடுத்து வருகிறது. இதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிடக்கூடிய ஒவ்வொரு தகவல்களும் லட்சக்கணக்கான மக்களை சென்று சேர்கிறது. இந்த நிறுவனம் பல ஆண்டுகளாகவே No layoff என்ற பாலிசியை பின்பற்றி வருகிறது.

இந்த சூழலில் திடீரென ஜோஹோ நிறுவனம் 300 ஊழியர்களை எந்த ஒரு நோட்டீசும் இல்லாமல் பணிநீக்கம் செய்ததாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. பிளைண்ட் ஆப் என்ற செயலியில் ஒரு நபர் வெளியிட்டுள்ள பதிவில் ஜோஹோ நிறுவனம் 300 ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென பணிநீக்கம் செய்ததாக பதிவு செய்துள்ளார். அண்மையில் ஜோஹோ நிறுவனம் 300 ட்ரெயினி ஊழியர்களை திடீரென வேலையில் இருந்து நீக்கியது டிசிஎஸ், கேப் ஜெமினி போன்ற நிறுவனங்களுக்கு மாற்றாக நான் ஜோஹோவை தேர்வு செய்தேன் ஆனால் இப்படி செய்துவிட்டார் என கூறியுள்ளார்.
ஜோஹோ வேலை குறித்து நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன் ஆனால் மற்ற நிறுவனங்களில் இருந்தாலாவது எனக்கு ஒரு நிலையான வேலை கிடைத்திருக்குமோ என்ற எண்ணம் எனக்கு தோன்றுகிறது. என்னுடைய வருமானத்தை நம்பி தான் என்னுடைய குடும்பமே இருக்கிறது ஆனால் திடீரென இப்படி செய்துவிட்டார்கள் , இதை நான் எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
இந்த பதிவு சமூகவலைதளங்கள் எங்கும் தீயாக பரவியது. இதற்கிடையே ஜோஹோ நிறுவனம் இதற்கு விளக்கம் தந்திருக்கிறது. எங்களுடைய நிறுவனம் No layoff என்ற பாலிசியை நீண்ட காலமாக பின்பற்றி வருகிறது. எங்கள் ஊழியர்கள் யாரையும் நாங்கள் லே ஆஃப் செய்வது கிடையாது என தெரிவித்து இருக்கிறது. எங்கள் நிறுவனத்தில் முழு நேரமாக வேலை செய்யக்கூடிய எந்த ஒரு ஊழியரையும் நாங்கள் பணிநீக்கம் செய்யவில்லை என விளக்கம் தந்திருக்கிறது.
இந்நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவு துணை இயக்குனரான முஹம்மத் சோஹைல், எங்களுடைய இண்டர்ன்ஷிப் ப்ரோக்ராமிற்கும் முழு நேர வேலைக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் இந்த பதிவினை வெளியிட்டு இருக்கிறார்கள் எனக் கூறியிருக்கிறார். இண்டர்ன்ஷிப்பில் வேலை கற்றுத் தரப்படுமே தவிர அவர்கள் தானாகவே முழு நேர ஊழியராக மாறிவிடுவார் என்பதற்கான உத்திரவாதம் ஒருபோதும் தரப்படுவதில்லை என கூறி இருக்கிறார்.
2026 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் செய்தவர்களில் 30 சதவீதம் பேர் ஏற்கனவே முழுநேர ஊழியர்களாக மாறிவிட்டனர் என்றும் அவர் கூறியிருக்கிறார். இண்டர்ன்ஷிப் காலம் முடிந்து செல்பவர்கள் லே ஆஃப் செய்யப்பட்டதாக கூறுவது சரியல்ல என அவர் விளக்கம் தந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications