இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஐடி நிறுவனமான சோஹோவின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல தரப்பட்ட கருத்துகளையும் முன் வைத்து கவனம் ஈர்ப்பவர். அந்த வகையில் எம்பிஏ படிப்பு குறித்த அவரது பதிவு நெட்டிசன்கள் மத்தியில் விவாத பொருளாகியுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வணிக பிரிவு பேராசிரியரான கிரிஸ் மார்கிஸ் பிரபல நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றை சுட்டிக்காட்டி ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் எம்பிஏ கல்லூரிகளை மூட வேண்டும் என்ற கருத்தினை தான் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

பேராசிரியரான கிரிஸ் மார்கிஸ் , நான் ஒரு வணிக பள்ளியில் பாடம் எடுக்கிறேன், இப்போது அவற்றை மூடுவதற்கான நேரம் இதுவே என்ற தலைப்பில் கட்டுரையை எழுதியுள்ளார். ஹார்வர்ட், கார்னெல் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற முன்னணி பல்கலைக்கழகங்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கற்பித்த அனுபவத்தை கொண்ட கொண்ட கிரிஸ் மார்கிஸ், எம்பிஏ படிப்பின் உண்மையான நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
மாணவர்கள் ஆரம்பத்தில் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் லட்சியத்தோடு எம்பிஏ படிக்க வந்தாலும், இறுதியில் அவர்கள் அதிக சம்பளம் தரும் கன்சல்டன்சி மற்றும் நிதித்துறை வேலைகளை தேடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என கூறியுள்ளார். மேலும், வணிக கல்லூரிகள் பொதுவாழ்வில் ஒரு வர்த்தக நோக்கத்தையும், டீல் பேசுவதையும் மட்டுமே ஊக்குவிக்கின்றன என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த கட்டுரையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்ரீதர் வேம்பு, தான் கடந்த 20 ஆண்டுகளாக இதே கருத்தைத்தான் வலியுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இந்தியா தனது வணிக பள்ளிகளை மூடிவிட்டு, அதற்கு பதிலாக ஸ்டார்ட்அப் இன்குபேட்டர்களில் கவனம் செலுத்துவது மிகவும் நன்மையை தரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பெரிய அளவிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக வேண்டும் மற்றும் அதிகமான பரிசோதனைகளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே இன்றைய அவசிய தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீதர் வேம்புவின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான எம்பிஏ கல்லூரிகள் உண்மையான தொழில் நுணுக்கங்களை கற்று தருவதில்லை; மாறாக விற்பனை , ஆள்சேர்ப்பு போன்ற குறிப்பிட்ட பிரிவுகளை மட்டுமே கற்று கொடுக்கின்றன என ஒரு நபர் சாடியுள்ளார்.
இன்ஜினியரிங் படிப்பை போலவே எம்பிஏ படிப்பிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவை மட்டும் கற்று தரும் இந்த முறை, எப்போதும் ஒரு உண்மையான தொழில்முனைவோரை உருவாக்காது என சில பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்ரீதர் வேம்புவின் கருய்த்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் பதில் தந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications

