சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் மென்பொருள் சேவை அளித்து வரும் ஸ்டார்ட்அப் சூப்பர்ஸ்டார் நிறுவனமான ஜோஹோ, 700 மில்லியன் டாலர் கிட்டத்தட்ட 6000 கோடி ரூபாய் முதலீட்டில் சிப் தயாரிப்பு துறைக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் ஜோஹோ நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், மத்திய அரசிடமிருந்து சிப் தயாரிப்பு பிரிவில் நிதி ஊக்கத்தொகை கோரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Zoho நிறுவனத்தின் இந்த திட்டம் தற்போது மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் ஆய்வில் உள்ளது. மேலும், ZOHO-வின் இத்திட்டம் குறித்துக் கூடுதல் தகவல் மற்றும் விளக்கம் தருமாறு இந்நிறுவனத்திடம், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டின் மார்ச் மாதம், ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, தமிழ்நாட்டின் தென்காசியில் செமிகண்டக்டர் டிசைன் பிரிவில் ஒரு நிறுவனத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார். மேலும், இந்தத் திட்டத்திற்காகத் தொழில்நுட்ப கூட்டாளியை ஜோஹோ நிறுவனம் தேடி வருவதாகவும் கூறப்பட்டது.
ஜோஹோ நிறுவனம் தற்போது சமர்ப்பித்துள்ள திட்டத்தின் படி, ஸ்பெஷல் கமர்சியல் அப்பிளிகேஷன்ஸ்-ல் பயன்படுத்துவதற்காக Compound Semiconductors தயாரிக்கத் திட்டமிட்டு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ZOHO ஸ்ரீதர் வேம்பு தனது நிறுவனத்தின் கிளைகளைத் தமிழ்நாட்டின் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் விரிவாக்கம் செய்தது மூலம் டெக் துறை வல்லுனர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் கடந்த 5 வருடத்தில் பெரிய அளவில் பிரபலமானார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் தென்காசியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் செல் பிரிவின் தலைவர் அனந்தன் அய்யாசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட செய்திக்கு, ஜோஹோ நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அவர்கள் முக்கியமான பதில் அளித்தார். இந்த பதில் தான் ZOHO-வின் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு திட்டத்தில் உள்ளது என்பது தெரியவந்தது.
அனந்தன் அய்யாசாமி முன்னாள் இன்டெல் நிறுவன இயக்குநரும், தமிழ்நாடு பிஜேபி ஸ்டார்ட்-அப் பிரிவின் தலைவர் ஆவார். இவர் தனது பதிவில் "தொழில்நுட்ப வளர்ச்சியை எங்கள் பகுதிக்குக் கொண்டு வருவதற்காகத் தொடர்ந்து பாடுபடுவேன்" என்று மார்ச் மாதம் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ஸ்ரீதர் வேம்பு, "தென்காசி-க்காக அனந்தன் ஆற்றியுள்ள பணிகளை நான் அறிவேன். அவரது கண்ணியம், பணிவு, கட்டுப்பாடு மற்றும் கொள்கை மீதான உறுதி ஆகியவை பாராட்டத்தக்கவை" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "தென்காசியில் செமிகண்டக்டர் வடிவமைப்பு திட்டத்தை நாங்கள் நீண்ட காலமாகப் பேசிக்கொண்டு வருகிறோம். இந்த துறையில் அனந்தன் அய்யாசாமியின் நிபுணத்துவம் அளப்பரியது" என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications