இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு ஐடி சேவை நிறுவனமாக சோஹோ (Zoho) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவை பொறுத்தவரை இந்தியாவை சேர்ந்த பெரும்பான்மையான திறமைகள் நம்முடைய கிராமப்புறங்களிலும் புறநகர் பகுதிகளிலும் தான் மறைந்து கிடக்கின்றன என தொடர்ச்சியாக கூறி வருகிறார்.
இளைஞர்களுக்கு அவர்கள் இருக்கும் பகுதியிலேயே அவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும், ஊரகப்பகுதியில் இருந்து தான் நம்முடைய வளர்ச்சியே வேகம் எடுக்கும் என தொடர்ச்சியாக கூறி வருகிறார். தன்னுடைய இந்த கூற்றை அவர் செயல்பாட்டிலும் நிரூபித்து காட்டி இருக்கிறார். சோஹோ நிறுவன அலுவலகத்தை தென்காசியில் நிறுவி சாதித்து காட்டியுள்ளார்.

தற்போது ஸ்ரீதர் வேம்புவின் பார்வை கும்பகோணத்தின் பக்கம் திரும்பியுள்ளது. தென்காசி மாடலை பின்பற்றி கும்பகோண்டத்தில் மிகப்பெரிய ஐடி வளாகத்தை தொடங்க இருப்பதாக சோஹோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. எக்ஸ் பக்கத்தில் வெளியாகி இருக்கக்கூடிய பதிவில் சோஹோ நிறுவனத்தின் அலுவலகத்தை தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணத்தில் பெரிய அளவில் அமைக்க போகிறோம் என தெரிவித்துள்ளது.
தென்காசி மாடலை பின்பற்றி கும்பகோணத்திலும் மிகப்பெரிய ஒரு வளாகத்தையும் உலகத்தரம் வாய்ந்த அலுவலகத்தையும் நிறுவ போகிறோம் என தெரிவித்திருக்கிறார் ஸ்ரீதர் வேம்பு. சோஹோ நிறுவனத்தின் இந்த அறிவிப்பு கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பகோணத்தில் மிகப்பெரிய அலுவலகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறியிருக்கிறது.
2020ஆம் ஆண்டிலேயே சோஹோ ஒரு சிறிய அலுவலகத்தை கும்பகோணத்தில் அமைத்துவிட்டது. அதனை தற்போது விரிவுபடுத்தி பெரிய ஐடி மையமாக மாற்ற உள்ளது. இந்த புதிய அலுவலகத்தில் 2000 ஊழியர்கள் வேலை செய்ய முடியும் என சோஹோ நிறுவனம் கூறியிருக்கிறது.
இந்த நிறுவனம் ஏற்கனவே கும்பகோணத்தில் தன்னுடைய கற்றல் மையத்தை செயல்படுத்தி வருகிறது. கும்பகோணத்தில் உள்கட்டமைப்பு , திறன் மேம்பாடு மற்றும் சமூக மேம்பாடு ஆகிய மூன்றிலும் முதலீடு செய்யப் போகிறோம் என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் கிராம பகுதிகளில் இருந்து முக்கிய தொழில்நுட்ப தயாரிப்புகள் வரப்போகின்றன என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு சோஹோ நிறுவனம் தென்காசியில் தன்னுடைய அலுவலகத்தை நிறுவியது . அது தற்போது சென்னைக்கு அடுத்ததாக சோஹோ மிகப்பெரிய ஒரு அலுவலகமாக வளர்ந்து நிற்கிறது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரு அலுவலகத்தை செயல்படுத்தி வருகிறது சோஹோ நிறுவனம். உத்திர பிரதேச மாநிலத்திலும் அலுவலகத்தை நிறுவி இருக்கிறது. இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை குறி வைத்துதான் சோஹோ தன்னுடைய அலுவலகத்தை நிறுவுகிறது அங்கு இருக்கக்கூடிய உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறது.


Click it and Unblock the Notifications