இன்றைய ஐடி துறையை பொறுத்தவரையில் எந்த பக்கம் திரும்பினாலும் ஒரே ஒரு பேச்சு தான் முதன்மையாக இருக்கிறது. அதுதான் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படுகிற AI தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பம் பல நன்மைகளையும் செய்துள்ளது. அதே நேரத்தில் சில நிறுவனங்கள் AI ஏஜெண்ட்களை வைத்துக்கொண்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ளன. சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தைக் காரணம் காட்டி கொத்து கொத்தாக ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பியது.
ஆனால் உண்மையிலேயே நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மந்தநிலையைச் சந்தித்து வருகின்றன. அதனால் தான் இந்த பணி நீக்கம் நடைபெறுகிறது. இதற்கெல்லாம் பலிகெடாவாக AI டெக்னாலஜியை நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன என்று அதிரடியான கருத்தை முன்வைத்தார் ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. அதற்கு அடுத்தபடியாக தற்போது வேறொரு கருத்தையும் முன்வைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
AI தொழில்நுட்பம் வளரும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தின் மதிப்பை விட சுமார் 10 மடங்கு அதிகமாக பணம் கொடுத்து அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வருகின்றனர். ஆனால் அப்படி எகிறும் பங்குகளின் விலை உடனே சரியவும் வாய்ப்பிருக்கிறது என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் ஸ்ரீதர் வேம்பு ஒரு போஸ்ட்டை பகிர்ந்துள்ளார். அதில் நிறுவனங்களின் "ப்ரைஸ் டு சேல்ஸ் ரேஷியோ" எப்படி அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கு உதாரணமாக சில நிறுவனங்களையும் குறிப்பிட்டிருந்தார் ஸ்ரீதர் வேம்பு. என்வீடியா, ஆப்பிள், ஆல்பபெட், மைக்ரோசாப்ட், மெட்டா மற்றும் மைக்ரான் டெக்னாலஜி போன்ற நிறுவனங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர வருமானத்தை விட அதிகமான விலையில் பங்குகளை வர்த்தகம் செய்வதாக குறிப்பிட்டார்.
ப்ரைஸ் டு சேல்ஸ் ரேஷியோ என்வீடியாவுக்கு 20 மடங்காகவும், ஆப்பிளுக்கு 10 மடங்காகவும், அல்பாபெட்க்கு 11 மடங்காகவும், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 10 மடங்காகவும், மெட்டா நிறுவனத்திற்கு 7.5 மடங்காகவும், மைக்ரான் நிறுவனத்திற்கு 19 மடங்காகவும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். அதாவது இந்நிறுவனங்கள் பெரும் வருவாயை விட சந்தையில் இவர்களுடைய பங்குகள் அதிக விலையில் வர்த்தகம் செய்யப்படுவதாக கூறியிருந்தார்.
1990-களில் இன்டர்நெட் என்ற புதிய தொழில்நுட்பம் உலகிற்கு அறிமுகமாகி வேகமாக வளர்ந்து வந்தது. இதனால் இன்டர்நெட் சேவை உலகத்தையே மாற்றப் போகிறது என்று நினைத்துக் கொண்டு முதலீட்டாளர்கள் பணத்தை அதிக அளவில் முதலீடு செய்தனர். அப்போது ஒரு இணைய நிறுவனத்தின் பெயருக்கு பின்னால் டாட் காம் என்ற பெயர் இருந்தாலே போதும். உடனே அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கி போட்டனர்.
இதனால் அந்த நிறுவனங்களின் பங்குகளும் அப்போது பயங்கரமாக எகிறியது. அதன் பிறகு ஒரு சில மாதங்களில் அந்தந்த நிறுவனங்களின் உண்மையான வருவாய் வரத் தொடங்கியது. இதனால் 2000 தொடக்கத்தில் டாட் காம் நிறுவனங்களிடம் இருந்த பணமெல்லாம் தீர்ந்து போய் முதலீடுகள் கிடைக்காமல் போனது. இதனால் பல நிறுவனங்கள் திவால் ஆகின. ஒரே ஆண்டில் பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. அப்போது பங்குச்சந்தையில் பயங்கர வீழ்ச்சி ஏற்பட்டது. இதுவே டாட் காம் கிராஷ் என அழைக்கப்பட்டது. இதையும் உதாரணம் காட்டியுள்ளார் ஸ்ரீதர் வேம்பு.
ஒரு நிறுவனத்தின் வருவாயை விட 10 மடங்கு அதிக விலையில் பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பங்குகளை யாரோ ஒரு முதலீட்டாளர் வாங்குகிறார் என்றால், அடுத்த 10 வருடத்திற்கு அந்த நிறுவனம் தனக்கு வரும் வருமானம் முழுவதையும் கொடுத்தால் மட்டுமே அவருக்கு லாபம் கிடைக்கும். சம்பளம் மற்றும் பிற விஷயங்களுக்கும் செலவு செய்யாமல் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அப்படி செய்ய முடியுமா? கண்டிப்பாக முடியாது அல்லவா? எனவே AI வளர்ச்சி அடையும் என்பதை நம்பி முதலீட்டாளர்கள் பங்குகளில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் இது மிகப்பெரிய மார்க்கெட் கிராஷ்க்கு வழிவகுக்கும் என்று ஸ்ரீதர் வேம்பு எச்சரித்துள்ளார்.
எனவே ஏஐ மோகத்தால் பலரும் விலை அதிகரிப்பிலும் பங்குகளை வாங்கி வருகின்றனர் அப்படி வாங்கும் பங்குகள் திடீரென சரியும்போது மிகப் பெரிய மார்க்கெட் கிராஷ் ஏற்பட்டுவிடும். நிறுவனங்களின் லாபம் குறையும் போது முதலீட்டாளர்கள் அவற்றை விற்க ஆரம்பிப்பார்கள். அப்போது விலையும் கடகடவென சரிந்து இது போன்ற பிரச்சனை ஏற்படும்.
எளிமையாக சொல்ல வேண்டுமானால் AI என்பது இனிவரும் காலத்தில் ஒரு சில அற்புதங்களை கண்டிப்பாக செய்யும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதையே வைத்து நிறுவனங்களின் பங்குகள் அதிகரிப்பது மிகப்பெரிய வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதைத் தான் ஸ்ரீதர் வேம்பு கூறியிருக்கிறார்.
இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன தெரியுமா? ஒரு கம்பெனியின் பங்குகளை வாங்குவதற்கு முன்பு அதன் உண்மையான லாபம் மற்றும் வருடாந்திர வருமானம் எவ்வளவு என்பதை எல்லாம் ஆராய்ந்து செயல்பட்டால் சந்தை வீழ்ச்சியிலும் தப்பித்துக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications