சென்னையை தலைமையிடமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ கார்ப்பரேஷன், 'அரட்டை' (Arattai) செயலியின் மூலம் சமூக ஊடக உலகில் புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலி, உலகளாவிய மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப்புக்கு மாற்றாக பார்க்கப்படுகிறது. காரணம், இது தற்போது வரை எந்த உலகளாவிய செயலியிலும் இல்லாத ஒரு தனித்துவமான அம்சத்தை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
'அரட்டை' செயலி பல வகைகளில் வாட்ஸ்அப்பை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது. உதாரணமாக, வாட்ஸ்அப்பில் இல்லாத, பயனரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கும் அம்சங்கள் இதில் உள்ளன. அரட்டை செயலி தற்போது அதன் ஆரம்ப நிலையில் இருந்தாலும், அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வரவுள்ளன. இதனால், வருங்காலத்தில் இது வாட்ஸ்அப்புக்கு ஒரு கடுமையான சவாலை அளிக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்த சூழலில் தான் ஜோஹோவின் அரட்டை செயலியை தொடர்ந்து, தற்போது அதன் புதிய வெப் பிரவுசரான 'உலா' (Ulaa), ஆப் ஸ்டோரில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. கூகுள் குரோம் மற்றும் ஆப்பிள் சஃபாரிக்கு நேரடி போட்டியாக கருதப்படும் 'உலா' பிரவுசர், அதன் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு அம்சங்களால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
'உலா' பிரவுசர், தொழில்நுட்ப ரீதியாக குரோமியம் (Chromium) கட்டமைப்பை பயன்படுத்தினாலும், அதன் முக்கிய நோக்கம் தரவுச் சேகரிப்பில் இருந்து விலகி இருப்பது தான். இதுபற்றி ஜோஹோ நிறுவனம் கூறுகையில், "உலா பிரவுசர், பயனர்களின் தரவுகளை சேகரிப்பது, சேமிப்பது அல்லது விற்பனை செய்வது கிடையாது. பயனர்களின் தரவுகளை சேகரித்து விளம்பரங்களுக்கு பயன்படுத்தும் கூகுள் போன்ற நிறுவனங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையாகும்.
'உலா' பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் ரகசியமாக இருப்பதாகவும், விளம்பரதாரர்களின் கண்காணிப்பில் இருந்து அவர்களின் ஆன்லைன் செயல்பாடுகள் மறைக்கப்படும்" என்றும் ஜோஹோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இந்த உலா பிரவுசர், குழந்தைகளுக்கு பாதுகாப்பான பிரவுசிங் சூழலை வழங்குகிறது. தொழில்முறை வெப் டெவலப்பர்கள் மற்றும் சோதனையாளர்களுக்கு பிரத்யேக வசதிகள் உள்ளடக்கியுள்ளது. மேலும், இந்த பிரவுசரில் Ad Blockers மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு தடுப்பு (Tracker Protection) ஆகியவை ஆரம்பத்திலேயே உள்ளமைக்கப்பட்டுள்ளன. இதனால், பாதுகாப்பான பிரவுசிங் அனுபவம் கிடைக்கிறது.
'உலா' இப்போது ஆண்ட்ராய்டு, iOS, விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் உள்ளிட்ட அனைத்து முக்கிய இயங்குதளங்களிலும் கிடைக்கிறது. இருப்பினும், Perplexity Comet போன்ற புதிய போட்டியாளர்களிடம் உள்ள அதிநவீன Agentic AI அம்சங்கள் உலா பிரவுசரில் இல்லாதது, கூகுள் குரோமின் ஆதிக்கத்திற்கு பெரும் சவாலாக இருக்கலாம் என்றும் சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications