ஒரு நல்ல வேலை பெறுவதற்கும் ஒரு சிறந்த தொழிலை உருவாக்குவதற்கும் கல்லூரி பட்டப்படிப்பு முக்கியமா என்ற விவாதம் உலகம் முழுவதுமே எழ தொடங்கி இருக்கிறது. தற்போது ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வேகமான வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஏஐ மூலம் பெரும்பாலான வேலைகள் எளிதாக செய்ய முடியும் என்பதால் எதற்காக கல்லூரி படிப்பு என்பது தான் முக்கியமான விவாதமாக உள்ளது.
வேலைவாய்ப்பு சந்தையில் வேலை நிறைய இருக்கிறது, ஆனால் அதற்கு ஏற்ற திறமை மிக்க நபர்கள் வேலைக்கு கிடைப்பதில்லை என நிறுவனங்களின் தலைவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இப்படி திறன் இடைவெளி இருக்கக்கூடிய சூழலில் ஏன் கல்லூரி பட்டப்படிப்பை படிக்காமல் நேரடியாக தொழில்துறைக்குத் தேவையான பயிற்சியை வழங்கி அவர்களை வேலைக்கு எடுக்க கூடாது என்ற விவாதம் பரவலாக எழுப்பப்படுகிறது.

ஒரு சாரார் கல்லூரி படிப்பு முக்கியம் என கூறுகின்றனர் , ஆனால் ஒரு சாரார் வேலைவாய்ப்புக்கு உதவாத கல்லூரி படிப்பும் பட்டப்படிப்பும் தேவையில்லை என கூறுகின்றனர். இந்த சூழலில் தான் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. Culture explorer என்ற எக்ஸ் பக்கத்தில் அண்மையில் palantir என்ற முன்னணி டெக் நிறுவனம் அமெரிக்காவில் மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல வேண்டாம் நேரடியாக 18 வயதிலேயே தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறியது, உடனடியாக பெரும்பாலான மாணவர்கள் அதனை பின்பற்ற தொடங்கிவிட்டனர் என என பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு மாணவர்களுக்கும் கல்லூரியில் சென்று படிப்பதன் மூலம் தங்களுக்கு எதுவுமே கிடைப்பதில்லை என்பதை உணரத் தொடங்கிவிட்டனர் , நேரடியாக தொழில் சார்ந்த பயிற்சிகளை பெறுவதற்கு மாணவர்கள் முன்வர தொடங்கிவிட்டனர் என பதிவு செய்திருக்கிறார். அவருடைய இந்த பதிவை குறிப்பிட்டு டிவிட்டரில் ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவை சேர்ந்த புத்திசாலி மாணவர்கள் கல்லூரி செல்வதை தவிர்க்கிறார்கள், தொலைநோக்கு பார்வையுடன் சிந்திக்க கூடிய நிறுவனங்கள் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கியிருக்கின்றன என கூறியுள்ளார்.
கல்லூரிக்கு செல்லாமல் நேரடியாக வேலைவாய்ப்புக்கு செல்வது மிகப்பெரிய ஒரு கலாச்சார மாற்றத்தையே கொண்டு வரப் போகிறது என கூறி இருக்கிறார். இதுதான் உண்மையான இளைஞர் சக்தி என்றும் ஒரு பட்டப் படிப்பை முடிப்பதற்கு அதிக கடன் பெற்று பின்னர் வேலைக்கு சென்று அந்த கடனை திரும்ப செலுத்துவது உள்ளிட்டவற்றை எல்லாம் தவிர்த்து விட்டு இளைஞர்களும் பெண்களும் சொந்த காலில் நிற்பதற்கு இது போன்ற நிறுவனங்களும் இது போன்ற திட்டங்களும் உதவுகின்றன எனக் கூறியுள்ளார்.
இந்த மாற்றம் அவர்கள் இந்த உலகை பார்க்கும் விதத்தை மாற்றும் மேலும் புது கலாச்சாரத்தையும் அரசியலையும் கொண்டுவரும் என கூறியிருக்கிறார். இந்தியாவை சேர்ந்த பெற்றோர்களும் இதனை கவனிக்க வேண்டும் என நான் கேட்டு கொள்கிறேன் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் , முன்னணி நிறுவனங்களும் இதை கவனித்தாக வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
ஜோஹோவில் எந்த வேலைக்கும் கல்லூரி பட்டப்படிப்பு தேவையில்லை, ஒரு மேலாளர் வேலைவாய்ப்பு பதிவிட்டு இதற்கு இந்த பட்டப்படிப்பு தேவை என பதிவிட்டால் உடனடியாக ஹெச்.ஆர் அவர்களை அழைத்து அந்த பட்டம் தேவை என்பதை நீக்குமாறு கூறுவோம் என தெரிவித்துள்ளார். தென்காசியில் நான் 19 வயதுடைய தொழில்நுட்பக் குழுவினுருடன் நெருக்கமாக பணியாற்றுவேன், அவர்களின் ஆற்றலும் திறமையும் அளப்பரியது . அவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்றால் நானே கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது என ஸ்ரீதர் வேம்பு பதிவு செய்திருக்கிறார். அதாவது கல்லூரி பட்டப்படிப்பில் நேரத்தை வீணாக்காமல் நேரடி தொழில் பயிற்சி பெறுங்கள் என தெரிவித்துள்ளார். ஜோஹோ இதற்காகவே மாணவர்களுகு தனி பயிற்சி நிறுவனத்தையே செயல்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications