தமிழ்நாட்டில் டெக் துறையைச் சேர்ந்த ஜாம்பவான்களில் ஒருவரும், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு இன்றைய கார்பரேட் நடைமுறைகளை உடைத்துப் பல புதிய மாற்றங்களைக் கொண்டு வருகிறார்.
தனது சிஇஓ அலுவலகத்தைச் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தென்காசிக்கு மாற்றியதில் இருந்து தனது அலுவலகத்தைச் சிறுநகரங்களில் மட்டுமே திறப்பேன் என உறுதியாகவும், வேகமாகவும் வளர்ச்சி அடைந்து வருகிறார்.

இதேபோல் எப்போதும் வேட்டி சட்டை, செருப்பு அணிந்து அனைத்து மீட்டிங்கிற்குச் செல்வது வரையில் கார்பரேட் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார் ஸ்ரீதர் வேம்பு. இந்த நிலையில் அனைவரும் ஆடம்பர கார்கள், பெரிய கார்களை வாங்கும் வேளையில் ஸ்ரீதர் வேம்பு எலக்ட்ரிக் ஆட்டோ வாங்கியதை மிகவும் பெருமையுடன் தனது டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு சமூக வலைத்தளமான எக்ஸ்-இல் தனது புதிய எலக்ட்ரிக் ஆட்டோவின் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்ட பதிவு மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பை பெற்றது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா குழுமத்தின் மான்ட்ரா எலக்ட்ரிக் ஆட்டோவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்ட ஸ்ரீதர் வேம்பு, "எனது புதிய எலக்ட்ரிக் ஆட்டோவை பாருங்க, வேகமாக இயங்கும் திறன் மற்றும் சிறப்பான சஸ்பென்ஷன் கொண்டு உள்ளது. இதை ரசித்து ஓட்டிக் கொண்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரது இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி 2,34,600 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்குப் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். இதில் சில முக்கியமான பதிவுகள்..

"உங்கள் புதிய எலக்ட்ரிக் ஆட்டோவை பற்றிய உங்கள் உற்சாகம் ஆச்சரியமளிப்பதாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் உள்ளது. ஆனால், நீங்கள் எலக்ட்ரிக் கார்கள் பற்றி இதுபோன்ற உற்சாகத்தை ஏன் காண்பிப்பதில்லை?" என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "உங்கள் ஈ-ஆட்டோ உங்கள் மற்றும் உங்கள் தயாரிப்புகள் போன்றே அருமையாக இருக்கிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த ஸ்ரீதர் வேம்பு, "நான் ஏற்கனவே டாடா நெக்ஸான் ஈ.வி பற்றிப் பதிவிட்டிருக்கிறேன். அதை நீண்ட தூர பயணங்களுக்குப் பயன்படுத்துகிறேன். 10 கி.மீட்டருக்கு குறைவான தூரங்களுக்கு எலக்ட்ரிக் ஆட்டோ" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இது ஸ்ரீதர் வேம்பு-வின் மூன்றாவது எலக்ட்ரிக் ஆட்டோ என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக அவர் மஹிந்திரா எலக்ட்ரிக்கின் ட்ரியோ எலக்ட்ரிக் ஆட்டோவையும் வாங்கியிருந்தார்.
"சார், இது உங்கள் மூன்றாவது எலக்ட்ரிக் ஆட்டோ தானே? மற்ற இரண்டையும் என்ன செய்தீர்கள்?" என்று மற்றொரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளித்த ஸ்ரீதர் வேம்பு அவர்கள், "அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எங்கள் பள்ளிக்கூடம் மற்றும் பண்ணைக்குப் பயன்படுத்துகிறோம்" என்று கூலாகப் பதில் அளித்தார்.
ஸ்ரீதர் வேம்பு அவர்களின் இந்தப் பதிவு எலக்ட்ரிக் வாகனங்களின் மீதான ஈர்ப்பை அதிகரிப்பதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் பயன்பாடு குறைந்து, காற்று மாசுபாடு கட்டுப்படுத்தப்படும். மேலும், எலக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கான செலவு குறைவாக இருப்பதால், எரிபொருள் செலவை மிகவும் மிச்சப்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications