சென்னை: சீனா-வின் வளர்ச்சி பலரையும் பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கும் காரணத்தாலேயே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீன பொருட்கள் மீதும், சீனா வெளிநாட்டில் இருந்து பெறப்படும் தொழில்நுட்பம் என பல வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தி எக்னாமிஸ்ட் பத்திரிக்கை வெளியிட்ட ஒரு செய்தியை அடிப்படையாக வைத்து சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் முன்னணி SAAS நிறுவனமான ZOHOவின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ட்விட்டர் முக்கியமான பதிவை வெளியிட்டு உள்ளார்.

சீன அறிவியல் கழகத்தின் (CAS) ஆராய்ச்சி கட்டிடத்தின் மத்திய பகுதியில் காப்புரிமைச் சுவர் என்ற ஒன்று உள்ளது. இந்த wall of patents என்ற சுவர் சுமார் ஐந்து மீட்டர் அகலமும் இரண்டு மாடி உயரமும் கொண்டது.
இந்தச் சுவரில், சுமார் 192 காப்புரிமைச் சான்றிதழ்கள் பெற்றுள்ளதைக் காட்டும் விதமாக அனைத்தையும் வரிசையாக மாட்டிவிடப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனமான சீன அறிவியல் கழகம் மற்றும் சீனா முழுவதிலுமுள்ள நிறுவனங்கள் உணவு பயிர்களின் உயிரியல் ஆராய்ச்சியில் மாஸ் காட்டி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளில் இந்த அமைப்பில் பணியாற்றும் சீன விஞ்ஞானிகள் கோதுமை தானியங்களின் நீளம் மற்றும் எடையை அதிகரிக்கும் ஒரு மரபணுவை கண்டுபிடித்துள்ளனர். இது தவிர, உப்பு அதிகம் கொண்ட மண்ணில் சோளம் மற்றும் கேழ்வரகு போன்ற பயிர்கள் வளர உதவும் மற்றுமொரு மரபணுவையும், மக்காச்சோளத்தின் விளைச்சலை சுமார் 10% அதிகரிக்கும் திறன் கொண்ட மரபணுவையும் கண்டறிந்துள்ளனர்.
கடந்த ஆண்டு இலையுதிர்காலத்தில், குயிஜோவு மாகாண விவசாயிகள், சீன அறிவியல் கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட ராட்சத நெல்லின் இரண்டாவது அறுவடையை நிறைவு செய்துள்ளனர்.
இப்படி சீனா தற்போது தாவரவியல் முதல் சூப்பர் கண்டக்டர் பிசிக்ஸ் வரையில் பல துறையில் முன்னோடியாக இருப்பது மட்டும் அல்லாமல் யாரிடமும் இல்லதா தொழில்நுட்பத்தையும், காப்புரிமையும் வைத்துள்ளது என தி எக்னாமிஸ்ட் பத்திரிக்கை செய்தி கூறுகிறது.
இந்த செய்தியை மேற்கோள் காட்டி டிவிட்டரில் பதிவிட்ட ZOHOவின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, "அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனை விட, சீனா தற்போது உயர்தர ஆராய்ச்சி இதழ்களில் அதிக ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுகிறது. கடந்த 2 தசாப்தங்களில் சீனாவின் வளர்ச்சி அபாரமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (R&D) சீனாவின் வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சியுடன் இணைந்தே நடந்துள்ளது என்பதை உணர்வது அவசியம். இரண்டையும் பிரிக்க முடியாது" என்றும் கூறியுள்ளார்.
"இந்த பிரிவில் இந்தியா அதிகம் உழைக்க வேண்டியுள்ளது. தொழில் ரீதியாக நாம் எங்கே முன்னேற வேண்டும் என்பதை துல்லியமாகக் கண்டறிவதற்காக, பொது-தனியார் துறை ஒத்துழைப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள்-தொழில்துறை ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காகவும் 'தேசிய தொழில்நுட்ப திட்டம்' (National Technology Mission) ஒன்றை நான் பரிந்துரைக்கிறேன். ஒவ்வொரு துணைத் துறையிலும் சிறந்து விளங்கும் குழுக்களுக்கு தேசிய விருதுகளை இதன் மூலம் வழங்குவது அவசியம்" என்று ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார்.
"ஊழல்" அல்லது "அரசியல்" அல்லது "இட ஒதுக்கீடு" போன்ற காரணங்களால் பலர் நம்பிக்கை இழக்கிறார்கள். ஆனால், சீனாவிலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இருநாடுகளிலும் பிரச்சனைகள் ஒன்றாக இருந்த போதிலும், சீனா ஒரு தொழில்நுட்ப சக்தியாக உருவெடுத்துள்ளது என்று ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவை போல் இந்தியாவும் வளர்ச்சிபெற முடியும். எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நமக்கு தேவை நம்பிக்கை மற்றும் செயல்படுத்தும் ஆர்வம் மட்டும் தான் என்று ஸ்ரீதர் வேம்பு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications